மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 27 மே 2020

தர்மபுரி மாணவி பலி: ஒருவர் கைது!

தர்மபுரி மாணவி பலி: ஒருவர் கைது!

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட இரண்டு இளைஞர்களில் ஒருவரை கைது செய்துள்ளனர் போலீசார்.

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே சிட்லிங் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அண்ணாமலை - மலர் தம்பதியர். இவர்களது மகள் சவுமியா, பாப்பிரெட்டிப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த வாரம் தீபாவளி விடுமுறைக்காக, இவர் தனது வீட்டுக்கு வந்தார்.

கடந்த 5ஆம் தேதியன்று, அண்ணாமலையும் மலரும் கூலி வேலைக்குச் சென்றுவிட்டனர். மதிய வேளையில், மலம் கழிப்பதற்காக வீட்டின் அருகேயுள்ள காட்டுப்பகுதிக்குச் சென்றார் சவுமியா. அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ், ரமேஷ் என்ற இரண்டு இளைஞர்கள் அவரைத் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். அவரைக் கடுமையாகத் துன்புறுத்தினர். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் வந்தவுடன், இருவரும் தப்பியோடிவிட்டனர்.

இதுகுறித்து கோட்டப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மாணவி சவுமியா தர்மபுரி காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார். அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் (நவம்பர் 10) அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட சதீஷ், ரமேஷ் இருவரையும் தேடும் பணியை முடுக்கினர் போலீசார். நேற்று (நவம்பர் 11) சதீஷ் என்பவர் பிடிபட்டார். இவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரமேஷைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த விவகாரத்தில், தனது புகாரை வாங்க முதலில் போலீசார் மறுத்துவிட்டதாகக் கூறியுள்ளார் சவுமியாவின் தந்தை அண்ணாமலை. அதன்பிறகு, அவர் 1077 என்ற மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு நடந்த துயரத்தைத் தெரிவித்ததாகவும், அதற்கடுத்த நாளே காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து மாலை மலர் செய்தி வெளியிட்டுள்ளது.

“கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் பேசிய பிறகு, எங்களை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்தனர். எனது மகளிடம் புகார் மனுவை எழுதி வாங்கிக்கொண்டனர். போலீசார் சொன்னதை அவர் எழுதிக் கொடுத்தார். பின்னர் டிஎஸ்பியைச் சந்தித்தோம். அவர், சவுமியா கற்பழிக்கப்பட்ட விவகாரத்தை வெளியில் சொல்ல வேண்டாம் என்று கூறினார். பின்னர் போலீசார் வேனிலேயே தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்குக் கொண்டுவந்து, சவுமியாவை சிகிச்சைக்குச் சேர்த்தனர்.

அப்போது, டாக்டரிடமும் பலாத்காரம் சம்பவத்தைக் கூற வேண்டாம் என்று போலீசார் தடுத்துவிட்டனர். இதனால் வாந்தி, மயக்கம் ஏற்படுவதாகக் கூறி, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் போலீசார் எனது மகளை காப்பகத்தில் சேர்த்துவிட்டனர். தொடர்ந்து அவருக்கு வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டதால் ஆஸ்பத்திரியில் கொண்டுவந்து சேர்த்தோம். அங்கு, சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். என் மகள் சாவு விவகாரத்தில், எனக்கு நீதி கிடைக்கவில்லை. எனது மகளைச் சீரழித்தவர்களை போலீசார் தப்பவிட்டு விட்டனர்” என்று தெரிவித்துள்ளார்.

குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ரமேஷின் தாயார் சிட்லிங் கிராமத்தில் மது விற்பனை செய்து வருவதாகவும், இதனால் அவர் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.

திங்கள், 12 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon