மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

சிறப்புக் கட்டுரை: இந்தியப் பொருளாதார மாற்றங்களும் வேலைவாய்ப்புகளும்! - (பாகம் 1)

சிறப்புக் கட்டுரை: இந்தியப் பொருளாதார மாற்றங்களும் வேலைவாய்ப்புகளும்! - (பாகம் 1)

நா. ரகுநாத்

பொருளாதாரம் வேகமாக வளர்ந்தாலே அதன் பலன்கள் அனைவருக்கும் போய் சேர்ந்துவிடும் என எந்த உத்தரவாதமும் இல்லை. வளர்ச்சியின் பலன்கள் பலரையும் சென்றடைந்திருக்கிறது என்பதன் வெளிப்பாட்டை நாட்டில் ஏழ்மை குறையும்போதும், வேலைவாய்ப்பு பெருகும்போதும் நாம் காணலாம். இந்தியா இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து வேகமான பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்யத் தொடங்கியது அனைவரும் அறிந்த கதை (சராசரியாக ஆண்டுக்கு 7-8 சதவிகித வளர்ச்சி) . இந்த அதிவேக வளர்ச்சியின் பயன்கள் சாதாரண மக்களுக்குப் போய்ச் சேர்ந்ததா என்ற கேள்வியை சில பொருளாதார ஆய்வாளர்கள் எழுப்பினார்கள். இதைத் தொடர்ந்து, நாட்டின் பொருளாதாரக் கொள்கை மற்றும் அதன் விளைவுகள் பற்றி குறிப்பிடத்தக்க விவாதங்கள் நடந்தன.

அதிலும், வறுமை ஒழிப்பு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் பற்றிய விவாதங்கள் மிகவும் சூடான, சர்ச்சைக்குரிய முறையில் அரங்கேறின. 2008-09இல் தொடங்கிய உலகப் பொருளாதார மந்தநிலையை இந்தியா ஓரளவு சமாளித்து, வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து பயணித்த போதும் இந்த இரு பிரச்சினைகள் பற்றிய விவாதம் முடிந்தபாடில்லை. வறுமை ஒழிப்பு பற்றிய விவாதம் சமீபகாலமாகப் பின்னுக்குத் தள்ளப்பட்டிருந்தாலும், வேலைவாய்ப்பு சற்றும் அடங்காத விவாதப் பொருளாக இருந்துவந்துள்ளது நம் கவனத்தைப் பெற வேண்டும். ‘வேலைவாய்ப்புகள் உருவாக்குவதில் திராணியற்றது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு’ என்கிற குற்றச்சாட்டை முன்வைத்தே 2014ஆம் ஆண்டு தேர்தலில் பிரச்சாரம் செய்து, ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்’ என்று உறுதியளித்த பாஜக அரசு, வாக்குறுதியை நிறைவேற்றியதா? வேலைகளை உருவாக்குவது அரசியல் கட்சிகளின் திராணியைப் பொறுத்ததா அல்லது பொருளாதார அமைப்பின் தன்மையைப் பொறுத்ததா?

கடந்த பத்து - பதினைந்து ஆண்டுக்காலத்தில் வேலைவாய்ப்பைத் தேடி உழைப்புப் படைக்குள் (labour force – workers + unemployed) புதிதாக எத்தனைப் பேர் வந்திருக்கிறார்கள்; அவர்களில் எத்தனை பேருக்கு தரமான, நிலையான வேலை கிடைத்தது; அதில் ஆண்கள் எத்தனை பேர், பெண்கள் எத்தனை பேர்; எந்தெந்த துறையில் வேலைவாய்ப்பு பெருகியது; விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்ததா போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்க முயற்சி செய்துள்ளது அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ‘உழைக்கும் இந்தியாவின் நிலை 2018’ என்கிற அறிக்கை.

துறை சார்ந்த மற்றும் அமைப்பு சார்ந்த மாற்றங்கள்

ஒரு பொருளாதாரம் வேகமாக வளரும்போது, தேசத்தின் மொத்த உற்பத்தியில் (GDP எனப்படும் Gross Domestic Product) விவசாயத்தின் பங்கு குறைந்து நவீனத்தின் அடையாளமாகக் கருதப்படும் தொழிற்துறை மற்றும் சேவைத்துறையின் பங்கு அதிகரிக்கும். இந்தத் துறை சார்ந்த மாற்றம் ஏற்படும்போதே, உழைப்புப் படையில் பலர் விவசாயம் அல்லாத தொழில்களை நோக்கி செல்லத் தொடங்கிவிடுவார்கள் என்பதற்கு வரலாற்றில் போதிய சான்றுகள் உள்ளன. இந்தியா வேகமாக வளர்கிறது என்பது உண்மையானால் இந்த மாற்றம் இந்தியாவிலும் நடந்திருக்க வேண்டும் அல்லவா?

2004-2011 காலத்தில், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் இருந்து 3.7 கோடி பேர் வெளியே வந்ததாக இந்த அறிக்கை கூறுகிறது. எனினும், உழைப்புப் படையில் இன்னும் 47 சதவிகித மக்கள், தேச உற்பத்தியில் வெறும் 18 சதவிகிம் பங்கைக் கொண்ட வேளாண் துறையில்தான் இருக்கிறார்கள். இத்துறையில் உற்பத்தித் திறனையும் வருமானத்தையும் பெருக்கி, தொழிலாளர்களை மற்ற துறைகளுக்கு மடைமாற்றம் செய்வதுதான் இந்தியப் பொருளாதாரத்தை எதிர்நோக்கி இருக்கும் மிகப்பெரிய சவால்.

சரி, இந்த 3.7 கோடி பேருக்கு தொழிற்துறையும், சேவைத்துறையும்தான் வேலை அளித்தனவா?

விவசாயம் அல்லாத துறையில் வேலைவாய்ப்புகள் என்று பார்த்தால், கட்டுமானப் பணிகளில்தான் (construction work) அதிகமான எண்ணிக்கையில் வேலையாட்கள் அமர்த்தப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 2004-2011 காலத்தில் பொருளாதாரம் வளர்ந்த வேகத்தை விட கட்டுமானத் துறை வேகமாக வளர்ந்தது. நாட்டின் மொத்த வேலைகளில் தொழிற்துறையின் பங்கு கடந்த முப்பதாண்டுகளாகவே 12-13 சதவிகிதம்தான்; வேலைகளை உருவாக்குவதில் பத்தே ஆண்டுகளில் கட்டுமானத் துறை, தொழிற்துறையை எட்டிப்பிடித்துள்ளது. இன்று இத்துறை 5 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது. ஆனால், இந்தக் கட்டுமான வேலைகள் நிரந்தர வேலைகள் அல்ல என்பதையும், தொழிலாளர் பாதுகாப்பை எவ்வகையிலும் உறுதி செய்யாத ஒரு துறை கட்டுமானம் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

அப்படியானால், தொழிற்துறையில் வேலைவாய்ப்பு அதிகரிக்கவே இல்லையா என்ற கேள்வி எழுகிறது. தொழிற்துறையில் அமைப்பு சார்ந்த ஆலைகள், அமைப்பு சாராத ஆலைகள் என இரு பிரிவு உள்ளது. 1983 முதல் 2004 வரை, தொழிற்துறையில் உருவாக்கப்பட்ட வேலைகளில் பெரும்பான்மையானவை அமைப்பு சாரா ஆலைகளில்தான் ஏற்பட்டன. இந்தப் போக்கு, 2004 க்குப் பின் மாறியிருக்கிறது. 2004-2011 காலத்தில், தொழிற்துறை வேலைகள் அமைப்பு சார்ந்த ஆலைகளில்தான் பெருகியது. ஆனால், 2000-2014 காலத்தில் உருவாக்கப்பட்ட அமைப்பு சார்ந்த ஆலை வேலைகளின் வளர்ச்சியில், ஒப்பந்தத் தொழிலாளர்களின் (contract workers) பங்கு 50 சதவிகிதம். 2017இல் அமைப்பு சார்ந்த ஆலைகளில், ஒப்பந்த மற்றும் முறைசாரா தொழிலாளர்களின் (informal workers) பங்கு 30 சதவிகிதம். இவர்களுக்குக் குறைந்தபட்ச அடிப்படை ஊதியமோ, சமூகப் பாதுகாப்புப் பயன்களோ கிடையாது.

அமைப்புசாராத ஆலைகள், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களாக தொழில்முனைவோரால் நடத்தப்படுகின்றன. வேளாண் மற்றும் கட்டுமானத் துறைகளுக்கு அடுத்தபடியாக இவைதான் கணிசமான அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன என்று ஒரு வாதம் உண்டு. இது எந்த அளவிற்கு உண்மை என்று பார்ப்போம். இந்தத் துறையில், சுய வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டோ, குடும்பத்தினரின் உதவியுடனோ இயங்கும் தொழில்கள்தான் 60 சதவிகிதம் பங்கை வகிக்கின்றன. வெளியாட்களை வேலையில் அமர்த்தி உற்பத்தியை மேற்கொள்ளும் ஆலைகளின் பங்கு குறைவாகத்தான் இருக்கிறது.

அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாராத தொழில்கள் இரண்டிலும் வேலைவாய்ப்பைப் பெருக்குவதில் பெரும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இவ்விரு தொழில்களிலும், உற்பத்தியில் தொழிலாளர்களின் பங்கு தொடர்ந்து சரிந்து வந்துள்ளதையும், மூலதனத்தின் பங்கு ஏறுமுகத்தில் இருப்பதையும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது. உற்பத்தி அதிகரித்தும் புதிதாக வேலைகள் உருவாகாத நிலை, தொழிலாளர்கள் உற்பத்தித்திறன் அதிகரித்துள்ள அளவிற்கு அவர்களின் ஊதியம் அதிகரிக்காமல் இருப்பது மற்றும் அமைப்பு சார்ந்த ஆலைகளில் முறைசாராத் தொழில்களின் பெருக்கம் என இந்தியாவின் தொழிற்துறையின் செயல்பாடு கவலைக்கிடமாக இருக்கிறது.

இந்தியாவில் வேலையின்மை

மேலோட்டமாகப் பார்த்தால், 2015இல் இந்தியாவில் வேலையின்மை 5 சதவிகிதம்தான். ஆனால் அது 2012-13 இல் 2.7 சதவிகிதமாக இருந்தது என்று பார்க்கும்போது, பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துவருவதை நாம் உணரலாம். இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் மற்றும் மும்பை பங்குச்சந்தை சேர்ந்து நடத்திய ஆய்வில், 2018 ஜூன் மாத நிலவரப்படி இந்தியாவின் மொத்த உழைப்புப் படையில் வேலை இல்லாதவர்களின் பங்கு 5.8 சதவிகிதம். உழைக்கும் வயது (15-64 வயது) மக்கள்தொகையில், சென்ற ஆண்டு உழைப்புப் படையில் பங்கேற்றவர்கள் 43.9 சதவிகிதமே. இந்த அளவீட்டில் மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது இந்தியா அடிமட்டத்தில் இருப்பது தெரியவருகிறது. மேலும், இந்த எண்ணிக்கை குறைந்துகொண்டே போகிறது என்கிற தகவலையும் இணைத்து இந்தியாவின் வேலையின்மைப் பிரச்சினையை ஆராய்ந்து பார்த்தால், வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை குறைந்துவரும் அதே வேளையில், வேலை தேடுபவர்களுக்குப் போதிய அளவில் வேலைவாய்ப்பு உருவாக்கப்படாமல் இருப்பது நிதர்சனமாகத் தெரிகிறது.

இந்தியாவின் உழைப்புப் படையில் பெண்களின் பங்கு குறைவாக உள்ளது எனப் பன்னாட்டு தொழிலாளர் அமைப்பின் (International Labour Orgnaization – ILO) தரவுகள் கூறுகின்றன. உழைக்கும் வயதில் உள்ள பெண்களில், 27 சதவிகிதப் பெண்களே உழைப்புப் படையில் பங்கேற்று வேலை பார்க்கவோ அல்லது வேலைதேடவோ செய்கிறார்கள். வேலை என்பது பெரும்பான்மையான பெண்கள் நாள்தோறும் பார்க்கும் வீட்டுவேலைகளைக் குறிக்காது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

2004-2011 காலத்தில் வேகமான பொருளாதார வளர்ச்சி இருந்தபோதும் வேலையைப் பெருக்காத வளர்ச்சி (jobless growth) என அது சித்திரிக்கப்பட்டது. 2011-2015உம் வேலைவாய்ப்பை உருவாக்காத காலமாகத்தான் இருந்தது. இந்தக் காலத்தில், 1 கோடிக்கும் மேலானவர்கள் வேளாண் துறையில் இருந்து வெளியே வந்தார்கள்; புதிதாக 1.5 கோடி பேர் வேலை தேடி உழைப்புப் படைக்குள் நுழைந்தார்கள். ஆனால் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு 1.2 கோடி எனப் பாதிக்கும் குறைவாகத்தான் அதிகரித்திருக்கிறது. 2015-இல் வேலை தேடியும் வேலை இல்லாமல் இருந்தவர்கள் 2.3 கோடி பேர். இவர்களில், பட்டதாரிகள் மற்றும் உயர்கல்வி பெற்றவர்கள் 90 லட்சம் பேர். 2015-இல் நாட்டில் மொத்த வேலையின்மை 5 சதவிகிதம் என்று பார்த்தோம். படித்தவர்களுக்கும், இளைஞர்களுக்கும் வேலையின்மை அதைவிட மூன்று மடங்காக 15 சதவிகிதம் என்கிற அவலநிலையே நாட்டில் நிலவி வருகிறது.

(தொடரும்)

கட்டுரையாளர் குறிப்பு:

பொருளியல் முதுகலைப் பட்டதாரி. இந்தியாவின் அரசியல் பொருளாதாரம் பற்றி ஆய்வு செய்வதிலும் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். தற்போது, பட்டயக் கணக்காளர் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு பொருளியல் பாடங்களில் பயற்சி அளித்து வருகிறார்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

-[email protected]

ஞாயிறு, 11 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon