மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 2 ஜூலை 2020

ஒயிட் வாஷூக்காக காத்திருக்கும் இந்தியா!

ஒயிட் வாஷூக்காக காத்திருக்கும் இந்தியா!

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் கடைசி ஆட்டம் சென்னை சிதம்பரம் மைதானத்தில் இன்று (நவம்பர் 11) நடைபெறவுள்ளது.

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி இரண்டு டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட், ஒருநாள் டி20 என அனைத்தையும் சேர்த்து இதுவரை நடந்து முடிந்த ஒன்பது போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகள் அணி ஒன்றில் மட்டுமே வெற்றியை ருசித்துள்ளது. அதனால் இன்றைய போட்டியில் ஆறுதல் வெற்றியுடன் ஊருக்குத் திரும்பும் முனைப்பில் அந்த அணி கவனம் செலுத்தும்.

இந்திய அணி இந்தத் தொடரை கைப்பற்றிவிட்டதால் வரவிருக்கும் ஆஸ்திரேலியத் தொடரைக் கருத்தில்கொண்டு இன்றைய போட்டியில் சில சோதனை முயற்சிகளை மேற்கொள்ளும். இந்த தொடரில் இந்தியாவின் பேட்டிங்கை எடுத்துக்கொண்டால் கேப்டன் ரோஹித் ஷர்மாவைத் தவிர மற்ற வீரர்களின் பங்களிப்பு பெரிய அளவில் இல்லை. எனவே ஷிகர் தவன், கே.எல்.ராகுல், ரிஷப் பந்த் ஆகியோர் இன்றைய போட்டியில் சிறப்பாக ஆட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். முதல் போட்டியில் இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்கி பொறுப்புடன் ஆடிய தினேஷ் கார்த்திக்கிற்கு இரண்டாவது போட்டியில் பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே இன்றைய போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்பட்சத்தில் அவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக் காத்திருப்பார்.

இன்றைய போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா, உமேஷ் யாதவ், குல்தீப் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. சித்தார்த் கவுல் அணியில் புதிதாக இணைந்துள்ளார். பும்ராவுக்கு பதில் புவனேஸ்வர் குமார், கலீல் அஹமது ஆகியோரைக் கொண்டு இந்தியா தனது பந்துவீச்சைத் தொடங்க முயற்சி செய்யும். சுழற்பந்துவீச்சு பிரிவில் யுஜ்வேந்திர சஹல், க்ருனல் பாண்டியா இருவரும் இந்தப் போட்டியில் எதிரணிக்குத் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

கிறிஸ் கெயில், எவின் லீவிஸ் போன்ற முன்னணி வீரர்கள் இல்லாமல் இந்தத் தொடர் முழுவதும் சிறப்பான தொடக்கம் அமையாமல் தத்தளித்து வருகிறது மேற்கிந்தியத் தீவுகள் அணி. ஒருநாள் தொடரில் அதிரடி ஆட்டத்தால் கவனம் பெற்ற ஷிம்ரன் ஹெட்மயருக்கு டி20 தொடரில் பெரிதாக க்ளிக் ஆகவில்லை. மற்றபடி பந்துவீச்சைப் பொறுத்தவரை பலமான அணியாகவே காட்சியளிக்கிறது. இருப்பினும் ஃபீல்டர்கள் அவ்வப்போது சொதப்புவதால் சில நேரம் ஆட்டம் கைமீறிச் சென்றுவிடுகிறது.

"எங்கள் அணியில் இருக்கின்ற வீரர்களைக் கொண்டு இந்தத் தொடரை வெற்றியுடன் முடிப்போம்" என்று அந்த அணியின் கேப்டன் கார்லோஸ் பிராத்வெய்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளதால் இந்தப் போட்டி விறுவிறுப்பாகச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய போட்டிக்கான இந்திய அணி விவரம்: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவன், கே.எல். ராகுல், தினேஷ் கார்த்திக், மனிஷ் பாண்டே, ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), க்ருனால் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், யுஜ்வேந்திர சஹல், புவனேஸ்வர் குமார், கலீல் அஹமது, ஷபாஸ் நதீம், சித்தார்த் கவுல்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி விவரம்: கார்லோஸ் பிராத்வெய்ட் (கேப்டன்), டேரன் பிராவோ, ஷிம்ரன் ஹெட்மயர், ஷாய் ஹோப், ஒபெடே மெக்காய், கீமோ பால், காரி பியாரே, கெய்ரன் போல்லார்ட், நிகோலஸ் பூரான், ரோவ்மேன் பவல், டேனிஷ் ராம்தின், செர்ஃபானே ரூதர்ஃபோர்டு, ஓஷானே தாமஸ்.

ஞாயிறு, 11 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon