சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்வதற்கு 10 வயது முதல் 50 வயது வரையுள்ள 539 பெண்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர்.
மண்டல, மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு, வருகிற 16ஆம் தேதியன்று மாலை 5 மணிக்குச் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து, நவம்பர் 17ஆம் தேதி அதிகாலை முதல் வழக்கமான பூஜைகள் நடைபெறும். டிசம்பர் 27ஆம் தேதியன்று மண்டல பூஜை நடைபெறும். பின்னர் கோயில் நடை சாத்தப்படும். மூன்று நாட்களுக்கு பின்பு, டிசம்பர் 30ஆம் தேதி மீண்டும் சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டு ஜனவரி 20ஆம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். ஜனவரி 14ஆம் தேதியன்று, சபரிமலையில் மகரவிளக்கு பூஜை நடைபெறவுள்ளது.
சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களும் செல்வதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் சில அமைப்பினர். உச்ச நீதிமன்றத் தீர்ப்பையடுத்து இரண்டாவது முறையாகக் கோயில் திறந்தபோது, 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும் கூட அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில், வருகிற 16ஆம் தேதியன்று மாலை 5 மணிக்கு சபரிமலை கோயில் நடை திறக்கப்படுகிறது. சபரிமலையில் ஒரே நாளில் அதிக மக்கள் கூடி நெரிசல் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, கடந்த மாதம் ஆன்லைன் முன்பதிவு தொடங்கப்பட்டது.
சபரிமலை என்ற இணையதள முகவரி மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்து, டிக்கெட் பெற்று, கோயிலில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். தங்கள் பெயர், ஊர், எந்த நாளில், எந்த வழியாகக் கோயிலை அடையத் திட்டம் உள்ளது என்பது போன்ற விவரங்களை, இதில் பக்தர்கள் பதிவு செய்ய வேண்டும். ஆன்லைனில் முன்பதிவு செய்யும்போது பக்தர்கள் தங்களின் புகைப்படம், முகவரி மற்றும் அடையாளச் சான்று, தனிப்பட்ட விவரங்கள், செல்போன் எண் ஆகியவற்றைத் தெரிவிக்க வேண்டும். இதில், பதிவு செய்துள்ள எண்ணிக்கைக்கு ஏற்பக் காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்வர்.
அக்டோபர் 30ஆம் தேதி முதல் கடந்த வியாழக்கிழமை வரை, ஆன்லைன் மூலம் 3.50 லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர். இதில் 539 பேர், 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள். கேரளக் காவல் துறை தகவல் தொழில்நுட்பப் பிரிவு, அம்மாநில டிஜிபிக்கு அளித்த அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.