மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 6 டிச 2019

எங்கள் நிலைப்பாட்டை சசிகலா வரவேற்றார்: தினகரன்

எங்கள் நிலைப்பாட்டை சசிகலா வரவேற்றார்: தினகரன்

மேல்முறையீடு வேண்டாம் என்ற தங்களின் முடிவுக்கு சசிகலா வரவேற்பு தெரிவித்ததாக தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் செல்லும் என்று மூன்றாவது நீதிபதி தீர்ப்பளித்துவிட்ட நிலையில், “மேல்முறையீடு செல்லவில்லை, தேர்தலை சந்திக்கிறோம்” என்று அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துவிட்டார்.

இந்த நிலையில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை, தினகரன் இன்று (நவம்பர் 9) நேரில் சந்தித்துப் பேசினார். அவருடன் பழனியப்பன், செந்தில் பாலாஜி, ரத்தினசபாபதி, வெற்றிவேல், ரங்கசாமி, முத்தையா உள்ளிட்ட தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களும் சசிகலாவை சந்தித்தனர். தகுதி நீக்கத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யமாட்டோம் என்று தினகரன் தெரிவித்திருந்த நிலையில், இதுதொடர்பாக சசிகலாவுடன் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களில் தற்போது 10பேர் சசிகலாவை சந்தித்துள்ளனர். நீதிமன்றத்தின் தீர்ப்பு, வருங்காலத்தில் நாங்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து சசிகலாவுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. மேல்முறையீடு வேண்டாம் என்ற எங்களின் முடிவு சரிதான் என்றும், இதுகுறித்து தனக்கு பலர் கடிதம் எழுதியுள்ளதாக சசிகலா வரவேற்பு தெரிவித்தார்” என்று குறிப்பிட்டார்.

சர்க்கார் விவகாரம் குறித்துப் பேசிய தினகரன், “சர்கார் படத்தில் எரிப்பதாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்களான குக்கர், கிரைண்டர் ஆகியவை ஜெயலலிதாவால் தரப்பட்டவை. இதற்கு முன்பு கொடுக்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியையும் சேர்த்து எரித்திருந்தார்கள் என்றால் இலவசம் வேண்டாம் என்ற எண்ணத்தில் திரைப்படத்தை எடுத்திருப்பதாகக் கூறலாம். திரைப்படத்தை நடுநிலையோடு எடுக்காமல் காழ்ப்புணர்ச்சியோடு எடுத்துள்ளனர். மறைந்த தலைவரை அவமரியாதை செய்வதுபோல படம் எடுத்துள்ளனர் என்பதுதான் எங்களுடைய வருத்தம்” என்று பதிலளித்தார்.

”இதில் ஆளுங்கட்சியின் அணுகுமுறை தவறானது. தமிழக அரசின் மீதுள்ள குற்றச்சாட்டுக்களை திசைதிருப்புவதற்காகவும், டெங்கு, பன்றிக் காய்ச்சல் போன்ற பிரச்சினைகளை மறைக்கவும் சர்க்காருக்கு எதிராக போராட்டம் நடத்துகிறார்கள்” என்று குற்றம்சாட்டிய தினகரன், தருமபுரி மாவட்டம் காரியமங்கலத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான தியேட்டரில் சர்கார் திரைப்படம்தான் ஓடிக் கொண்டிருக்கிறது என்றும் விமர்சித்தார்.

வெள்ளி, 9 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon