மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 டிச 2019

தமன்னாவின் ரொமான்டிக் மோடு!

தமன்னாவின் ரொமான்டிக் மோடு!

நடிகை தமன்னா நடிக்கவுள்ள அடுத்த படத்தில், ரொமான்டிக் காட்சிகள் தூக்கலாக இருக்குமோ என எதிர்பார்க்கவைத்துள்ளன அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்.

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தொடர்ந்து பிஸி நடிகையாகவே வலம்வரும் நடிகை தமன்னா, வளர்ந்த ஹீரோக்கள் மட்டுமல்லாது இளம் நடிகர்களுடனும் அவ்வப்போது இணைந்து நடித்துவருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான 'மாநகரம்' எனும் படத்தில் நடித்திருந்த சந்தீப் கிஷனுடன் இணைந்து தற்போது புதிய படத்தில் நடிக்கிறார் தமன்னா.

‘நெக்ஸ்ட் என்டி’ எனத் தற்போது பெயரிடப்பட்டுள்ள இந்த தெலுங்குப் படத்தை பிரபல இயக்குநரான குணால் கோலி இயக்குகிறார். ‘ஃபனா’ உள்ளிட்ட இந்திப் படங்களை இயக்கி கவனம் ஈர்த்த நிலையில் இவர் இயக்கும் முதல் தெலுங்குப் படம் இதுதான் எனும் விஷயம் குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் ‘அறிந்தும் அறியாமலும்’ புகழ் நடிகர் நவ்தீப் மற்றும் ‘சித்திரம் பேசுதடி’ புகழ் நடிகை பூனம் கவுர் போன்றவர்களும் நடித்துள்ளனர்.

ரெய்னா ஜோஷி மற்றும் அக்‌ஷய் பூரி தயாரிக்கும் இந்தப் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். லண்டன் மற்றும் ஹைதராபாத் போன்ற பகுதிகளில் படப்பிடிப்புகள் நடத்தப்பட்ட இப்படம், ஒரு ரொமான்டிக் என்டெர்டைனர் படம் என சினிமா வட்டாரத்தில் கூறப்பட்டது. அதை உறுதி செய்யும் விதமாகவே அமைந்துள்ளன நடிகர் ராணா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் இன்று (நவம்பர் 9) வெளியிட்ட இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்.

ஷூவைக் கழற்றிவைத்து சந்தீப் சோஃபாவில் படுத்திருக்க கையில் தலையணையுடன் சோஃபாவின் மீது தமன்னா ஏறி நிற்கும் விதமாக வெளியாகியுள்ள ஒரு போஸ்டர், காதலர்களுக்கு இடையேயான செல்லச் சண்டையை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. அதேபோல் இருவரும் நேருக்கு நேர் முகம் காட்டித் தோன்றியுள்ள மற்றொரு போஸ்டர், படத்தில் இருவருக்குமான நெருக்கத்தை விவரிக்கும்படியும் உள்ளது.

எனவே, காதல்-மோதல் என இன்றைய காதலின் யதார்த்தத்தை விவரிக்கும்படி இப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது. இந்தப் படம் போக, ‘சைரா நரசிம்ம ரெட்டி’, குயினின் தெலுங்கு ரீமேக்கான ‘மஹாலக்‌ஷ்மி’ உள்ளிட்ட படங்களிலும் தமன்னா பிஸியாக இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 9 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon