மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 6 டிச 2019

தங்க தமிழ்ச்செல்வன் மீது வழக்குப் பதிவு!

தங்க தமிழ்ச்செல்வன் மீது வழக்குப் பதிவு!

பேனர் வைக்க அனுமதி மறுத்ததைக் கண்டித்து மறியலில் ஈடுபட்ட தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 19 பேர் மீது ஆண்டிப்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களின் 18 தொகுதிகளிலும், தினகரனுக்கு ஆதரவாக உள்ள 3 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளிலும் அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லை என்று குற்றம் சாட்டிய அமமுக, இதனைக் கண்டித்து 22 தொகுதிகளிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தது. இந்த நிலையில் முதல் தொகுதியாக ஆண்டிப்பட்டியில் நாளை உண்ணாவிரதம் நடைபெறவுள்ளது. இதில் தினகரன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றுகிறார்.

இதனையொட்டி அமமுக சார்பில் தினகரனை வரவேற்று பேனர்கள் வைத்திருந்த நிலையில், இதற்கு ஆண்டிப்பட்டி காவல் துறையினர் அனுமதி மறுத்தனர். இதனைக் கண்டித்து அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் அமமுகவினர் நேற்று ஆண்டிப்பட்டியில் தேவர் சிலை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தங்க தமிழ்ச்செல்வன் உள்பட 19பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்ச்செல்வன், “நாங்கள் உண்ணாவிரதம் நடத்தும் நாளில் அதிமுகவின் ஊழியர்கள் கூட்டத்துக்கு காவல் துறை அனுமதியளித்துள்ளது. எதற்காக இப்படி அனுமதியளித்தார்கள் என்று தெரியவில்லை. எங்களுடைய பேனர்களையும் வைக்கவிடவில்லை. இதனைக் கண்டித்துதான் போராட்டம் நடத்தினோம். என் மீது வழக்குப் பதிவு செய்தால் என்னைக் கைது செய்யட்டும். அதனை நான் நீதிமன்றத்தில் சந்தித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 9 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon