கனமழை காரணமாக நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதால் உணவுப் பாதுகாப்புத் திட்டத்துக்கான அரசின் நெல் கொள்முதல் பாதிப்படையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்ற செப்டம்பர் மாதத்தில் வடக்கிந்திய மாநிலங்களில் பெய்த கனமழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் நெல் உற்பத்தி இந்தப் பருவத்தில் சற்று மந்தமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசு தரப்பிலிருந்து மேற்கொள்ளப்படும் நெல் கொள்முதல் மற்றும் அரிசி ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட முக்கிய நெல் சாகுபடிப் பகுதிகளில் நெல் உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் நெல் விலை ஏற்றத்தைச் சந்தித்துள்ளதால் அரசு தரப்பு கொள்முதல் குறையும் வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து பஞ்சாப் உணவு மற்றும் விநியோக அமைப்பின் முதன்மைச் செயலாளரான சின்ஹா, எகனாமிக் டைம்ஸ் ஊடகத்திடம் பேசுகையில், “இந்த சீசனில் மழை பாதிப்பு காரணமாக நெல் உற்பத்தி 160 முதல் 165 லட்சம் டன் வரையில் மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு கொள்முதலுக்காகக் கொண்டுவரப்படும் நெல்லின் அளவு 20 முதல் 30 சதவிகிதம் குறைந்துள்ளது. நெல் முதிர்வு காலத்தில் மழை பெய்ததால்தான் இந்த இழப்பு ஏற்பட்டுவிட்டது” என்று தெரிவித்துள்ளார். அரசு தரப்பு மதிப்பீட்டின்படி முன்னர் இங்கு 200 லட்சம் டன் அளவிலான நெல் உற்பத்தியாகும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் அடுத்த வாரம் நெல் கொள்முதல் பணிகள் தொடங்கும் நிலையில் அங்கும் மழை காரணமாக நெல் உற்பத்தி குறைந்துள்ளதால் கொள்முதல் அளவும் குறைவாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.