மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 6 டிச 2019

சதுர்வேதி: தேடப்படும் குற்றவாளி என அறிவிப்பு!

சதுர்வேதி: தேடப்படும் குற்றவாளி என அறிவிப்பு!

இரு பெண்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சதுர்வேதியைத் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது காவல் துறை குற்றப் பிரிவு.

2004ஆம் ஆண்டு, சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த சுரேஷ்,சதுர்வேதி என்றழைக்கப்படும் பிரசன்ன வெங்கடாச்சாரி என்பவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சதுர்வேதியின் ஆசிரமத்தில் தனது மனைவி மற்றும் மகள் இருவரும் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்படுவதாகவும், தனது வீட்டின் கீழ்தளத்தை சதுர்வேதி ஆக்கிரமித்துள்ளதாகவும், தன்னிடமிருந்து 15 லட்சம் ரூபாய் வரை அவர் மிரட்டிப் பறித்ததாகவும், சுரேஷ் கொடுத்த புகாரில் கூறப்பட்டிருந்தது.

ஸ்ரீ ராமானுஜ மிஷன் எனும் தன்னார்வ நிறுவனத்தை நடத்திவந்த சதுர்வேதிக்கு வெங்கடசரவணன் எனும் பெயரும் உண்டு. வேதங்கள் மற்றும் இந்து தத்துவங்கள் குறித்துச் சொற்பொழிவு ஆற்றும் திறமை கொண்டவர். சுரேஷ் அளித்த புகாரின் பேரில், சதுர்வேதியைத் தேடினர் போலீசார். அதன்பின் போலீசாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டார். இரு பெண்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது தொடர்பான வழக்கு விசாரணை, சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு தொடர்பாக, 2016ஆம் ஆண்டு மீண்டும் சதுர்வேதி கைது செய்யப்பட்டார். அதன்பின், ஜாமீனில் வெளிவந்தவர் தலைமறைவாகிவிட்டதாகத் தகவல் வெளியானது.

தற்போது இவர் வடமாநிலங்களில் ஆசிரமங்கள் அமைத்து சொற்பொழிவுகள் ஆற்றி வருவதாகவும், அடிக்கடி நேபாள நாட்டுக்குச் சென்றுவருவதாகவும் கூறப்படுகிறது. மகளிர் நீதிமன்றத்தில் சதுர்வேதி மீதான வழக்கு விசாரணையின் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர் போலீசார். இதன் தொடர்ச்சியாக, இன்று (நவம்பர் 9) சதுர்வேதியைத் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது சென்னை மாநகரக் காவல் துறையின் மத்தியக் குற்றப்பிரிவு.

சென்னையிலுள்ள அவரது ஆசிரமத்தில் பணியாற்றுபவர்களிடம் பேசிய போலீசார், சதுர்வேதியின் சமீபத்திய புகைப்படங்களைக் கொண்டு தேடுதல் வேட்டை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வெள்ளி, 9 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon