மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 6 டிச 2019

தென்தமிழகத்தில் மிதமான மழை!

தென்தமிழகத்தில் மிதமான மழை!

அடுத்து வரும் 24 மணிநேரத்தில் தென்தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று (நவம்பர் 9) செய்தியாளர்களைச் சந்தித்தார் சென்னை வானிலை ஆய்வு மையத்தைச் சேர்ந்த புவியரசன். அப்போது, கடந்த வியாழக்கிழமை (நவம்பர் 8) முதல் தாய்லாந்து வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள மலையடிவாரத்தில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது மத்திய அந்தமான் பகுதியில் நிலவி வருவதாகத் தெரிவித்தார்.

“அடுத்து வரும் மூன்று தினங்களில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, இது வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளது. வரும் நவம்பர் 10ஆம் தேதியன்று அந்தமான் மற்றும் தென்கிழக்குப் பகுதிகளுக்கும், 11ஆம் தேதியன்று வங்கக்கடல், வட அந்தமான், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கும், 12ஆம் தேதியன்று மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கும், 13ஆம் தேதியன்று மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியானது குமரிக்கடல், இலங்கை மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவி வருகிறது. இதன் காரணமாக, அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தென்தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தூத்துக்குடி, திருச்செந்தூர், திருநெல்வேலி பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் பருவமழை குறைந்துள்ளது” என்று தெரிவித்தார் புவியரசன். தற்போது சென்னையில் மழைக்கு வாய்ப்பில்லை என்று கூறினார்.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 10 செ.மீ. மழையும், சீர்காழியில் 7 செ.மீ. மழையும், திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் 5 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

வெள்ளி, 9 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon