மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 டிச 2019

அதிமுக, திமுகவின் வாக்கு வங்கி: பிரேமலதா கேள்வி!

அதிமுக, திமுகவின் வாக்கு வங்கி: பிரேமலதா  கேள்வி!

திமுக மற்றும் அதிமுகவின் தற்போதைய வாக்கு வங்கி என்ன என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேமுதிக கடலூர் மாவட்ட செயலாளரும், பண்ருட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிவக்கொழுந்து இல்ல திருமண விழா பண்ருட்டியில் இன்று (நவம்பர் 9) நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்டு திருமணத்தை நடத்திவைத்துப் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா, கடலூர் மாவட்டம் விஜயகாந்த் கோட்டை என்று கூறியுள்ளார்.தேமுதிகவில் இளைஞர்கள் அதிகம் உள்ளதாகவும் பணத்திற்காக கட்சியை விட்டுத் தாவும் கூட்டம் தேமுதிகவில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பிரேமலதா, “நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றி பெற்று, தமிழகத்தில் முதன்மை கட்சியாக தேமுதிக திகழும். தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தேமுதிகவுக்கு மக்கள் ஆதரவு உள்ளது. ஊழல் நிறைந்த கட்சிகள் திமுக, அதிமுக தான். ஊழல் நிறைந்த முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு அகற்றப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

“ஜெயலலிதா இருந்தபோது அதிமுகவுக்கு ஒரு வாக்குவங்கி இருந்தது. இன்று அதிமுக 5 துண்டுகளாக உடைந்துவிட்டது. அவர்களிடம் சென்று இன்றைய அதிமுகவின் வாக்கு வங்கி என்ன என்று கேள்வி எழுப்ப முடியுமா,, திமுகவில் கலைஞர் இருந்தபோது ஒரு வாக்கு வங்கி இருந்தது. தற்போது ஸ்டாலின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், திமுகவின் வாக்கு வங்கி என்ன என்று கணிக்க முடியுமா,. ஆர்.கே.நகரில் டெபாசிட்டை இழந்த கட்சிதான் திமுக” என்று விமர்சித்த பிரேமலதா, சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல் எது வந்தாலும் அதனைச் சந்திக்க தேமுதிக தயாராகவுள்ளது என்றும் தெரிவித்தார்.

தீபாவளி அன்று மட்டும் பட்டாசு வெடிப்பதால் சுகாதாரக் கேடு ஏற்படாது. பட்டாசு வெடிப்பதற்குத் தடை விதிக்கப்படுவதால் பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் நலனுக்காக நடவடிக்கை எடுக்கத் தவறிய அதிமுக அரசு டாஸ்மாக் கடைகளில் 600கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டதை சாதனையாகக் கூறுவதாக குற்றம்சாட்டினார். தமிழகத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று வேதனைத் தெரிவித்துள்ள பிரேமலதா விஜயகாந்த் மக்கள் பணியை அதிமுக அரசு சரிவர செய்யவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

வெள்ளி, 9 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon