மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 6 டிச 2019

இலங்கையில் திருமாவளவன்

இலங்கையில் திருமாவளவன்

கார்த்திகை மாதம் ஈழத் தமிழர்களின் புனித மாதம். இந்த மாதத்தில்தான் மாவீரர் நாள் அங்கே கடைபிடிக்கப்படுகிறது. தமிழர்கள் வசிக்கும் பகுதியை ஆளும், வடமாகாண சபை 2014 ஆம் ஆண்டு நிறைவேற்றிய தீர்மானத்தின்படி ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் வடமாகாண மரநடுகை மாதமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்தத் தீர்மானத்தை ஒட்டி தமிழ் தேசிய பசுமை இயக்கத் தலைவரும், முன்னாள் விவசாய அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் தமிழ் ஈழத்தில் இந்த ஆண்டு கார்த்திமை மாதம் பெரிய அளவில் மர நடும் விழாக்களை நடத்த இருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று இலங்கை சென்றிருக்கிறார்.

தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் அழைப்பை ஏற்று திருமாவளவன், நான்கு நாள் பயணமாக இன்று (9.11.2018) மதியம் கொழும்பு விமான நிலையத்தில் சென்றிறங்கினார். அவரை தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் சார்பில் வரவேற்றனர்.

கொழும்பிலிருந்து சிலாபம், வவுனியா, கிளிநொச்சி வழியாக யாழ்ப்பாணம் செல்லும் திருமாவளவன், நாளை (10.11.2018) மாலை யாழ்பாணத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். குறிப்பாக நாளை பிற்பகல் மூன்று மணியளவில் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நடைபெறவுள்ள மரநடுகை மற்றும் மலர்கண்காட்சி திறப்புவிழாவில் கலந்துகொள்கிறார். இந்நிகழ்வில் வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் பங்கேற்கிறார்.

ஈழத்துப் பள்ளி பிள்ளைகளுக்கு தாய்மண் அறக்கட்டளையின் சார்பில் ரூபாய் ஆறரை லட்சம் மதிப்புள்ள சைக்கிள்களை திருமாவளவன் தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் மூலம் வழங்குகிறார் என்று விடுதலைச் சிறுத்தைகள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வெள்ளி, 9 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon