மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 6 டிச 2019

பாடப் புத்தகத்தில் மீண்டும் முத்துராமலிங்கத் தேவர்!

பாடப் புத்தகத்தில் மீண்டும் முத்துராமலிங்கத் தேவர்!

வருகிற கல்வியாண்டில் பள்ளிப் பாடத்திட்டத்தில் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாறு இடம்பெறும் என சென்னை உயர் நீதிமன்ற கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த எம்.சங்கிலி என்பவர், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநிலப் பொதுச்செயலராக இருந்து வருகிறார். இவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவொன்றைத் தாக்கல் செய்தார். “இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர்களில் முக்கியமானவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். சுபாஷ் சந்திர போஸூடன் இணைந்து சுதந்திரத்துக்காகப் பல ஆண்டுகள் போராடியவர்; சிறை சென்றவர். தனது சொத்துக்களை ஏழை மக்களின் நல்வாழ்வுக்காகச் செலவு செய்தவர். இவரது பிறந்தநாள் அரசு விழாவாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதை வளர்ந்து வரும் இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில், 1978-79ஆம் ஆண்டு 6ஆம் வகுப்புப் பாடத்தில் அவரது வாழ்க்கை வரலாறு பாடமாக வைக்கப்பட்டிருந்தது. 2018 - 19ஆம் ஆண்டு, அதில் இருந்து தேவரின் வாழ்க்கை வரலாறு நீக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசுக்கு மனு அளித்தும் நடவடிக்கை ஏதும் இல்லை. அதனால், முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாற்றை மீண்டும் சேர்க்க உத்தரவிட வேண்டும்” என இம்மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை செப்டம்பர் 28ஆம் தேதியன்று விசாரித்தது நீதிபதிகள் டி.ராஜா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு. இது தொடர்பாக, அரசிடம் விளக்கம் பெற்றுத் தெரிவிக்குமாறு அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு, இந்த வழக்கை ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.

இந்நிலையில், இன்று (நவம்பர் 9) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், வரும் கல்வியாண்டில் 7ஆம் வகுப்புக்கான பள்ளிப் பாடத்திட்டத்தில் முத்துராமலிங்கத் தேவர் வாழ்க்கை வரலாறு இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

வெள்ளி, 9 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon