மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 டிச 2019

முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ தகுதி நீக்கம்!

முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ தகுதி நீக்கம்!

மத ரீதியாக தேர்தல் பிரச்சாரம் செய்து வெற்றிபெற்றதாக வழக்கு தொடரப்பட்ட நிலையில், முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ ஷாஜியை தகுதி நீக்கம் செய்து கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கேரள மாநிலம் அழீக்கோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டவர் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் கே.எம் ஷாஜி. இவர் தன்னை எதிர்த்து இடதுசாரி கூட்டணி சார்பில் போட்டியிட்ட பத்திரிகையாளர் நிகேஷ்குமாரைவிட கூடுதலாக 2,287 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார்.

தேர்தலின்போது மதரீதியான பிரச்சாரத்தை முன்வைத்து ஷாஜி வெற்றிபெற்றதாக நிகேஷ்குமார் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், “முஸ்லீம் வாக்காளர்கள் முஸ்லீம் அல்லாதோருக்கு வாக்களிக்கக் கூடாது என ஷாஜி துண்டு பிரசுரங்களை வினியோகித்தார்” என்று குற்றம் சாட்டியிருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்ற நீதிபதி பிடி ராஜன், சட்டமன்ற உறுப்பினர் ஷாஜியை தகுதி நீக்கம் செய்து இன்று (நவம்பர் 9) தீர்ப்பளித்துள்ளார். மேலும் நிகேஷ்குமாருக்கு ஷாஜி 50 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று குறிப்பிட்ட நீதிபதி, தீர்ப்பு குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேரள சபாநாயகருக்கும், மாநில தேர்தல் ஆணையத்துக்கும் அறிவுறுத்தியுள்ளார். அழீக்கோடு தொகுதியில் தான் வெற்றிபெற்றதாக அறிவிக்க வேண்டும் என்கிற நிகேஷ்குமாரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அங்கு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பினை அடுத்து, ஷாஜி அடுத்த 6 வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக ஷாஜி தெரிவித்துள்ளார்.

முஸ்லீம் அல்லாதோருக்கு சொர்க்கத்தில் இடம் இல்லை என்று துண்டு பிரசுரங்கள் விநியோகித்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 9 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon