மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 3 ஜுன் 2020

வாகன ஓட்டிகளின் பொறுப்புணர்வு!

வாகன ஓட்டிகளின் பொறுப்புணர்வு!

சட்டவிதிகள், நீதிமன்ற உத்தரவுகள், காவல் துறையின் விழிப்புணர்வு இவையெல்லாம் இருந்தாலும், வாகனத்தில் பயணிப்பவர்கள் சுயஒழுக்கத்தோடு ஹெல்மெட் அணிந்து பயணிக்க வேண்டுமென்ற பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

“மோட்டார் சட்ட விதிகளின் படி, நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும். இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமென விதிகள் இருந்தும் அதை அரசு அமல்படுத்தவில்லை. அதை அமல்படுத்த வேண்டும்” என்று கோரி, சென்னை கொரட்டூரைச் சேர்ந்த கே.கே.ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணையில், மோட்டார் வாகனச் சட்டத்தின் படி இரு சக்கர வாகனங்களில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி, ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று தமிழக அரசும் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாரயாணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (நவம்பர் 9) விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் 60 சதவிகிதமாக அதிகரித்திருந்தாலும், பின்னால் உட்கார்ந்து பயணிப்பவர்கள் ஹெல்மெட் அணிவதே கிடையாது என்று கூறினர் நீதிபதிகள். சிலர் தலை வியர்ப்பதாகவும், தலைவலி ஏற்படுவதாகவும் கூறி ஹெல்மெட் அணியாமல் செல்கின்றனர் என்று சாடினர்.

காவல் துறை, போக்குவரத்துக் காவல்துறை உதவியுடன் ஹெல்மெட் அணிய வலியுறுத்தி, துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், “ஹெல்மெட் கட்டாயம் என்ற சட்ட விதிகள் உள்ளன. அதை நடைமுறைப்படுத்த நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. ஆனால், ஹெல்மெட் அணியாமல் வந்துவிட்டு 100 ரூபாய் அபராதத்தைச் செலுத்திவிட்டு மீண்டும் ஹெல்மெட் அணியாமல் செல்கின்றனர்” என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

உத்தரவுகளை மதிக்காமல் வெறுமனே உத்தரவுகளைப் பிறப்பித்து என்ன பயன் என வேதனைத் தெரிவித்த நீதிபதிகள், அரசுத் தரப்புக்குச் சில கேள்விகளை எழுப்பினர். "முக்கிய சாலைகளில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளதா? இருசக்கர வாகனத்தில் அதிவேகத்தில் செல்பவர்கள் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படுகிறார்களா? போக்குவரத்துக் காவல் துறையில் போதுமான காவலர்கள் இருக்கிறார்களா? அத்துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள் உள்ளன? ஹெல்மெட் அணியாமல் செல்வதால் ஏற்படும் தலைக்காயம் மற்றும் முதுகுத் தண்டுவடப் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது" என்று தெரிவித்தனர் நீதிபதிகள். இது தொடர்பாக அரசு பதிலளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நவம்பர் 28ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

வெள்ளி, 9 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon