மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

உள்ளாட்சித் தேர்தல்: எது தடுக்கிறது?

உள்ளாட்சித் தேர்தல்: எது தடுக்கிறது?

1996ஆம் ஆண்டு வார்டு வரையறை அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலை ஏன் நடத்தக் கூடாது என்று குறிப்பிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், அதனை எது தடுக்கிறது என்று கேள்வியும் எழுப்பியுள்ளது.

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த ஆண்டு நவம்பர் 17ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. ஆனால், தேர்தல் நடத்தப்படாத நிலையில், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத மாநிலத் தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசுக்கு எதிராக திமுக சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று (நவம்பர் 8) விசாரணைக்கு வந்தது.

அப்போது, “தன்னிச்சையான அமைப்பான மாநிலத் தேர்தல் ஆணையம், நீதிமன்ற உத்தரவின்படி, தேர்தலை அறிவித்திருந்தால், தேர்தல் ஆணையத்தை யாரும் குறை கூறியிருக்க மாட்டார்கள். உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்கும் மேல் முறையீடு செய்யவில்லை. 2011ஆம் ஆண்டு உள்ளாட்சி அமைப்பில் தேர்தல், 1996ஆம் ஆண்டு வார்டு வரையறை அடிப்படையில் நடத்தப்பட்டுள்ளது. அந்த வரையறை அடிப்படையில் தற்போது ஏன் தேர்தல் நடத்தக் கூடாது. இதனை எது தடுக்கிறது” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர் துரைசாமி, தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்ததாகவும், வார்டு மறுவரையறை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால் தேர்தல் அறிவிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சனோ, “அரசின் அவசர சட்டமும், சட்டமும் எந்த வகையிலும் தேர்தல் நடத்த தடையாக இல்லை. நீதிமன்றம் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யாவிட்டால் தேர்தல் நடத்துவதில் அக்கறை காட்ட மாட்டார்கள்” எனக் குற்றம்சாட்டினார்.

இதையடுத்து வழக்கின் விசாரணையை நவம்பர் 23ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

வெள்ளி, 9 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon