மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 10 ஏப் 2020

சர்கார் மறு தணிக்கை: இயக்குநர் முன் ஜாமீன் மனு!

சர்கார் மறு தணிக்கை: இயக்குநர் முன் ஜாமீன் மனு!

சர்கார் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளார்.

அரசின் நல திட்டங்கள், மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக சர்கார் படத்திற்கு எதிராக அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சர்கார் திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்குகளில் நேற்று பேனர்களைக் கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வலியுறுத்தி அதிமுக அமைச்சர்கள் பேட்டிகளும் அளித்தனர்.

நேற்று நள்ளிரவு ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டிற்குக் காவல்துறையினர் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக சென்றோம் என காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டாலும் ஏ.ஆர்.முருகதாஸ் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை இன்று பிற்பகல் நீதிபதி இளந்திரையன் முன்பு நடைபெறவுள்ளது.

இந்நிலையில் சர்கார் படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என கோவை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவரான திருப்பூர் சுப்பிரமணியன் நேற்று தெரிவித்திருந்தார். படத்திற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் படக்குழுவினர் குறிப்பிட்ட காட்சிகளை நீக்க முடிவெடுத்தனர்.

அதைத் தொடர்ந்து இன்று காலை 10.30 மணியளவில் நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள சாஸ்திரி பவனில் மறு தணிக்கை செய்யும் பணிகள் தொடங்கின. இலவச மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட பொருள்களை தூக்கி எறிவது, வில்லி கதாபாத்திரத்திற்கு வைக்கப்பட்ட கோமளவல்லி என்ற பெயரை ஒலியிழக்கச் செய்வது உள்ளிட்ட மாற்றங்கள் படத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. மறு தணிக்கை மதியம் 12 மணியளவில் நிறைவடைந்தது. இந்நிலையில் பிற்பகல் முதல் திரையரங்குகளில் மறு தணிக்கை செய்யப்பட்ட சர்கார் படம் திரையிடப்படவுள்ளது.

படக்குழுவின் இந்த முடிவுக்கு அதிமுக அமைச்சர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். “ஒட்டுமொத்த தமிழினத்தின் பிரதிநிதியாக இருந்த அம்மாவின் பெயருக்கு களங்கம் விளைவிப்பதைத் தவறு என்பதைப் புரிந்துகொண்டு சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க முன்வந்த படக்குவினருக்கு நன்றி. இன்றே காட்சிகளை நீக்கி மதியத்தில் இருந்து படத்தை திரையிடும் படக்குழுவினருக்கு கழக புரட்சி தலைவி அம்மா பேரவை நன்றி தெரிவித்துக்கொள்கிறது” என்று வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அனுமதியின்றி சர்கார் படத்திற்காக பேனர் வைத்ததற்காக கரூர், மணப்பாறை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல இடங்களில் விஜய் ரசிகர்கள் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெள்ளி, 9 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon