மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 4 ஜூலை 2020

டூப்ளிகேட் மோடி: காங்கிரசுக்கு பிரச்சாரம்!

டூப்ளிகேட் மோடி: காங்கிரசுக்கு பிரச்சாரம்!

சத்தீஸ்கரில் காங்கிரஸுக்கு ஆதரவாகப் பிரதமர் மோடி போன்று தோற்றம் கொண்ட ஒருவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கம் நிறைந்த சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்டமாக 18 இடங்களுக்கு நவம்பர் 12ஆம் தேதியும், மீதமுள்ள 72 இடங்களுக்கு நவம்பர் 20 ஆம் தேதியும் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் பாஜக ஆட்சி செய்யும் சத்தீஸ்கரில் அக்கட்சியை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் . எதிர்க்கட்சியான காங்கிரஸை சேர்ந்த, பிரதமர் மோடி போன்று தோற்றம் கொண்ட அபினாந்த் பதாக் என்பவர் காங்கிரஸை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளார். . பாஜகவுடன் கூட்டணியிலுள்ள இந்திய குடியரசுக் கட்சியில் இருந்த இவர் கடந்த மாதம் காங்கிரஸில் இணைந்தார்.

அபினாந்த் பதாக், பிரதமர் மோடியை போன்று தோற்றத்திலும், குரலிலும், நடை, உடை அனைத்திலும் அவரின் பிரதிபலிப்பாக இருந்து வருகிறார். இதனாலேயே இவரை டூப்ளிகேட் மோடி என மக்கள் அழைக்கின்றனர்.

தற்போது அவர், காங்கிரஸுக்கு ஆதரவாகப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நக்சலைட்கள் ஆதிக்கம் நிறைந்த பாஸ்தர், தண்டேவாடா, ஜாக்தால்பூர் மற்றும் கோன்காடாகான் பகுதிகளில் அவர் தீவிரமாக காங்கிரஸுக்கு வாக்கு சேகரித்து வருகிறார். 2014ல் பாஜக அளித்த வாக்குறுதிகள் பொய்யானவை, பாஜக ஆட்சியில் அவை நிறைவேற்றப்படமாட்டாது. பாஜக ஆட்சியில் நல்ல காலம் வராது, எனவே காங்கிரஸுக்கு வாக்களியுங்கள் என்று அவர் கூறிவருகிறார்.

இதுகுறித்து அவர், “நான் மோடியைப் போல் இருப்பதால் அவர் அளித்த வாக்குறுதிகள் குறித்து மக்கள் என்னிடம் கேள்வி எழுப்புகின்றனர். சாதாரண மனிதர்களின் பிரச்சனைகளைக் கண்டு வேதனை அடைந்தேன். எனவே காங்கிரஸில் கடந்த மாதம் இணைந்தேன்” என்று கூறியுள்ளார்.

அம்மாநிலத்தைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் பீமா மாண்டவி, ”பிரதமர் மோடி போன்று தோற்றம் கொண்டவரை பயன்படுத்தி காங்கிரஸ் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. இதுவும் பிரதமரின் புகழை மட்டுமே நிரூபிக்கிறது. இங்கு ஒரே ஒரு மோடி மட்டுமே உள்ளார்” என்று கூறியுள்ளார்.

வெள்ளி, 9 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon