மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 5 ஏப் 2020

பன்றிக் காய்ச்சல்: 6 பேர் உயிரிழப்பு!

பன்றிக் காய்ச்சல்: 6 பேர் உயிரிழப்பு!

பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்த 6 பேர் இன்று (நவம்பர் 9) உயிரிழந்தனர்.

தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு வேகமாகப் பரவி வருகிறது. மிகப்பெரிய அளவில் இதன் தாக்கம் உள்ளது. காய்ச்சல் பாதிப்பையடுத்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டாலும், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பது தொடர்ந்து வருகிறது. நாமக்கல் மாவட்டம் அத்தனூர் பகுதியைச் சேர்ந்த அங்காயி என்பவர், பன்றிக் காய்ச்சல் பாதிப்பினையடுத்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று (நவம்பர் 9) காலை இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மதுரை திருவேங்கடத்தைச் சேர்ந்த லட்சுமி, திருமங்கலத்தை சேர்ந்த சுப்புலட்சுமி ஆகிய இருவரும் இன்று உயிரிழந்தனர். தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆண்டிப்பட்டி கீழ ஓடைத்தெருவைச் சேர்ந்த மல்லிகா என்பவர் பன்றிக் காய்ச்சல் பாதிப்பினால் உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் சூலூரில் புஷ்பா என்ற பெண்ணும், பீளமேட்டில் காயத்ரி என்ற பெண்ணும் பன்றிக் காய்ச்சலால் இன்று உயிரிழந்தனர்.

இன்றைய நிலவரப்படி, மதுரை அரசு மருத்துவமனையில் தனிப்பிரிவில் 91 பேருக்குக் காய்ச்சலுக்காகத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் மூன்று பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறிகளும், மூன்று பேருக்கு பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகளும் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

வெள்ளி, 9 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon