மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 10 ஏப் 2020

சர்கார் சர்ச்சை: திரையுலகினர் கண்டனம்!

சர்கார் சர்ச்சை: திரையுலகினர் கண்டனம்!

சர்கார் திரைப்படத்திற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இன்று படக்குழு படத்தின் காட்சிகளை நீக்கி மறு தணிக்கை செய்துள்ளது. தணிக்கை துறையிடம் முறையாகச் சான்றிதழ் பெற்ற படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதும், தடை கேட்பதும், திரையரங்குகளில் பேனர்களை கிழிப்பதும் திரைத்துறையினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. படக்குழுவினருக்கு ஆதரவாகக் கமல் கருத்து கூறிய நிலையில் ரஜினி, ரஞ்சித் உள்ளிட்டவர்களும் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளதோடு போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.

ரஜினிகாந்த்

தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு, அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும், படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ரஞ்சித்

சர்கார் விமர்சனத்தை எதிர்க்க அரசதிகாரத்தையும், வன்முறையையும் கையாளுபவர்களுக்கு தெரிந்தே இருக்கிறது, இந்த நாட்டில் என்றோ ஜனநாயகம் அழிந்து/இழந்து போய்விட்டது என்று.

குஷ்பூ

ஒரு திரைப்படத்துக்கு தணிக்கை துறை அனுமதி அளித்தபின் இயக்குநரின் சுதந்திரத்தில் அத்துமீறும் உரிமையை எது கொடுத்தது? அல்லது யார் கொடுத்தார்கள்? இதிலிருந்து ஒரு கதையில் வரும் சிறு புனைவுகூட தமிழகத்தைக் கொள்ளையடிக்கும் சின்ன புத்திக்காரர்களை அச்சுறுத்துகிறது என்பது தெரிகிறது.

அரசியலும் அதிகாரமும் துஷ்பிரயோகம் செய்யப்படுவது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. கையை முறுக்கிக் கொண்டு, அச்சுறுத்தி, பய உணர்வை ஏற்படுத்துவது இது முதன்முறை அல்லவே. விஜய்யின் முந்தையப் படங்களுக்கும் இப்படியான எதிர்ப்பு கிளம்பியதை நாம் பார்த்திருக்கிறோம். நம் எம்எல்ஏக்களை எது இப்படியெல்லாம் அச்சம் கொள்ளவைக்கிறது? அதிமுகவுக்கு பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மென்ட் வீக்.

ஜி.வி.பிரகாஷ் குமார்

தணிக்கை குழு தணிக்கை செய்த திரைப்படத்தைத் தணிக்கை செய்ய நினைப்பது சட்டப்படி குற்றம். பின்னர் எதற்காக தணிக்கை துறை இருக்கிறது? பொது இடங்களில் வன்முறையைப் பிரயோகிப்பது சரியல்ல.

விஷால்

படம் தணிக்கை குழுவால் தணிக்கை செய்யப்பட்டு மக்களும் பார்த்துவிட்டார்கள். பின் எதற்கு இவர்கள் அழுகையும் கூக்குரலுமிடுகின்றனர்.

வெள்ளி, 9 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon