மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 11 ஜூலை 2020

ஐபிஎல் நிர்வாகிகளைச் சூடேற்றிய கோலி

ஐபிஎல் நிர்வாகிகளைச் சூடேற்றிய கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி எடுத்த முடிவு ஒன்று ஐபிஎல் தொடரின் நிர்வாகக் குழுவினரைக் கோபப்படுத்தியுள்ளது.

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஐபிஎல் நிர்வாகக் குழுவின் கூட்டம் ஹைதராபாத்தில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இந்திய கேப்டன் விராட் கோலி வரவிருக்கும் உலகக் கோப்பை தொடரைக் கருத்தில்கொண்டு ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார் போன்ற முன்னணி வீரர்கள் சிலருக்கு அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் முழுவதும் ஓய்வு அளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். கோலி முன்வைத்த இந்தக் கோரிக்கைக்கு மற்ற அணிகளிடமிருந்து போதிய ஆதரவு கிடைக்கவில்லை. அதனால் அவரது கோரிக்கையை ஏற்க நிர்வாகக் குழு மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஐபிஎல் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் பிடிஐ ஊடகத்துக்கு நேற்று (நவம்பர் 8) அளித்த பேட்டியில், "அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் மார்ச் 29 தொடங்கி மே 19ஆம் தேதி முடிவடைகிறது. இந்திய அணி உலகக் கோப்பை தொடரில் தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவைச் சந்திப்பதற்கும் இதற்கும் சரியாக 15 நாட்கள் இடைவெளி இருக்கிறது. அதனால் ஐபிஎல் தொடர் முழுவதும் இந்திய வேகங்களுக்கு ஓய்வு அளிப்பது என்பது நடக்காத ஒன்றாகும்" என்று கூறியுள்ளார்.

மேலும் கோலியின் இந்த முடிவுக்கு துணை கேப்டனான ரோஹித் ஷர்மாவே ஆதரவளிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், கோலி தனது யோசனையைக் கூறியவுடன் ஐபிஎல் நிர்வாகக் குழு தலைவர் வினோத் ராய், ரோஹித் ஷர்மாவின் முடிவைக் கேட்டார். அதற்கு ரோஹித், ஒருவேளை மும்பை அணி ப்ளே ஆஃப் அல்லது ஃபைனலுக்கு முன்னேறி பும்ரா உடற்தகுதியுடன் இருந்தால், நிச்சயம் அவருக்கு ஓய்வு அளிக்க மாட்டேன் என்று கூறியதாகத் தெரிவித்தார்.

வெள்ளி, 9 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon