மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

தலிபான் அரசியல் கூட்டத்தில் இந்திய பிரதிநிதிகள்!

தலிபான் அரசியல் கூட்டத்தில் இந்திய பிரதிநிதிகள்!

தலிபான்களின் அரசியல் பிரிவு பிரதிநிதிகள் பங்கேற்கும் அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பான ரஷ்யா முன்னெடுக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர். தலிபான் பிரதிநிதிகளுடன் இந்திய அதிகாரிகள் பங்கேற்கும் முதலாவது அமைதிப் பேச்சுக்கான ஆலோசனைக் கூட்டம் இது.

ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்காக ரஷ்யா இன்று (நவம்பர் 9) ஆலோசனைக் கூட்டம் ஒன்றை கூட்டியுள்ளது. இதில் பங்கேற்க இந்தியா, ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், சீனா, பாகிஸ்தான், தஜகிஸ்தான், துருக்மேனிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான், அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் தலிபான் இயக்கத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

இதில் இந்திய பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என இந்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்திருந்தார். இக்கூட்டத்தில் வெளியுறவுத்துறை முன்னாள் செயலாளரும் ஆப்கானிஸ்தானுக்கான இந்திய தூதராக பணியாற்றியவருமான அமர் சின்ஹா, பாகிஸ்தானுக்கான இந்தியாவின் முன்னாள் தூதர் டிசிஏ ராகவன் ஆகியோர் இந்திய பிரதிநிதிகளாக பங்கேற்கின்றனர்.

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தோகாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தலிபான்களின் அரசியல் பிரிவு பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர். இதில் ஆப்கானிஸ்தான் அரசு பிரதிநிதிகள் நேரடியாகப் பங்கேற்கவில்லை. அதே நேரத்தில் ஆப்கானிஸ்தானின் அமைதி கவுன்சில் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் ஏற்கனவே இந்தியா பல்வேறு கட்டமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ரஷ்யா முன்னெடுத்திருக்கும் சர்வதேச அளவிலான ஆப்கான் தொடர்பான இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

வெள்ளி, 9 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon