மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 13 ஆக 2020

தேவர் மகன் 2: கிருஷ்ணசாமிக்கு கருணாஸ் பதில்!

தேவர் மகன் 2: கிருஷ்ணசாமிக்கு கருணாஸ் பதில்!

சுயலாபத்துக்காக டாக்டர் கிருஷ்ணசாமி தேவர்மகன் 2 படத்தை எதிர்ப்பதாக நடிகர் கருணாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியன் 2 படத்தை அடுத்து தேவர் மகன் 2 படத்தை எடுக்க இருப்பதாக கமல்ஹாசன் அறிவித்தார். இதையடுத்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, இதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். மேலும் கிருஷ்ணசாமி, தேவர்மகன் என்று எடுக்காமல், தேவேந்திரர் மகன் என்று எடுங்கள் என்றும் தெரிவித்திருந்தார்.

இதனிடையே நடிகர் கருணாஸ், இவ்விவகாரம் குறித்து, “தமிழகத்தில் யார் என்ன படம் எடுக்கவேண்டும், என்ன பெயர் வைக்கவேண்டும் என்பதைக் கதாநாயகனும், தயாரிப்பாளரும் முடிவு செய்வார்கள் தவிர நீங்கள் இல்லை. தேவர் மகன் படத்தால் தென் தமிழகத்தில் பெரிய கலவரம் ஏற்பட்டதாகக் கூறியிருந்தீர்களே... ஏதேனும் இரு சமூகத்திடையே கலவரம் வரும் மாதிரி எந்த ஒரு காட்சியாவது அப்படத்தில் இருக்கிறதா? தேவர் மகன் படம் என்பது கிராமத்தில் இரு குடும்பத்தினரிடம் உள்ள பகையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். அதில் கூட இறுதி காட்சியில் அனைவரும் பிள்ளைகளை படிக்க வைக்க சொல்லி அறிவுரையே வழங்கியிருப்பார் கமல் ஹாசன்.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் அளித்த பேட்டியில் கூட தன் சாதியினரை உயர்வாகப் படம் எடுக்கலாம் தவிர எந்தச் சாதியையும் குறைத்து படம் எடுக்கக் கூடாது எனக் கூறியிருந்தார்.

புராணக் கதைகளில் உள்ள வீரபாகுத்தேவர், புலித்தேவன், வெள்ளையத்தேவன், ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி, வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், பசும்பொன் திருமகனார் உட்பட பல வரலாற்று பெருமைகளுக்கு சொந்தக்காரர்களான எங்களை பற்றி அக்காலம் முதல் இந்த யுகம் இருக்கும் வரை திரைப்படங்கள் வந்துகொண்டுதான் இருக்கும். உங்களுக்கு ஏதாவது வரலாறு இருந்தால் தாங்களும் படம் எடுக்கலாம். யாரும் தடுக்கப் போவதில்லை.

தற்சமயம் அரசியல் அனாதையாக இருக்கும் தாங்கள் மாஞ்சோலை தொழிலாளர்கள் சம்பவத்தை வைத்து அரசியல் செய்தது போல் தேவர்மகன் 2 படத்தை வைத்து தங்களை சாதி தலைவராக காட்டவும், தங்கள் சுயலாபத்திற்காக நீங்கள் சார்ந்த சாதியினரை பலிகடாவாக்க நினைப்பதும் கடும் கண்டனத்துக்குரியது” என்று கருணாஸ் கூறியுள்ளார்.

வெள்ளி, 9 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon