மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 18 ஜன 2021

கருக்கலைப்பு: பெண் மருத்துவர் கைது!

கருக்கலைப்பு: பெண் மருத்துவர் கைது!

சேலத்தில் சட்டவிரோதமாகக் கருக்கலைப்பு செய்து வந்த ஸ்கேன் சென்டருக்கு சீல் வைத்த அரசு அதிகாரிகள், அங்கிருந்த பெண் மருத்துவர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

கருவில் இருக்கும் சிசு ஆணா, பெண்ணா என்று அறிவிக்கும் சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று கடந்த மே மாதம் தமிழகச் சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்தது.

தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தைத் தொடர்ந்து, சேலம் மாவட்டத்தில் சட்டவிரோதமாகக் கருக்கலைப்பு செய்வது அதிகரித்து வருவதாகப் புகார் எழுந்தது. கடந்த ஏப்ரல் மாதம், சேலம் வாழப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சட்டவிரோதமாகக் கருக்கலைப்பு செய்ததில் ஒரு பெண் உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்தவர் மருத்துவர் சந்திரா. இவர், அரசு சுகாதார மற்றும் மருத்துவப் பணிகள் இணை இயக்குநராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் மேட்டூர் அரசு மருத்துவமனை அருகில் பிரசவ மருத்துவமனை மற்றும் ஸ்கேன் சென்டர் நடத்தி வந்தார்.

இங்கு சட்ட விரோதமாகக் கருக்கலைப்பு மற்றும் ஸ்கேன் மூலம் சிசுவின் பாலினத்தைக் கண்டறிந்து தெரிவிப்பதாக மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்குப் புகார்கள் வந்தன. இதையடுத்து ஊரக நலப்பணிகள் டிஎஸ்பி தாமஸ் பிரபாகரன், முதுநிலை எக்ஸ்ரே மருத்துவர் நடராஜன் மற்றும் மருத்துவக் குழுவினர் அந்த ஸ்கேன் சென்டரில் நேற்று சோதனை நடத்தினர்.

இதில் சட்ட விரோதக் கருக்கலைப்பு மற்றும் ஸ்கேன் மூலம் பாலினம் தெரிவித்தல் ஆகிய குற்றங்கள் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்குக் கிடைத்தது. இதையடுத்து, மருத்துவர் சந்திராவைக் கைது செய்தனர் போலீசார். சுகாதாரத் துறை அதிகாரிகள், சந்திராவின் ஸ்கேன் சென்டருக்கு சீல் வைத்தனர்.

வெள்ளி, 9 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon