மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 16 ஜன 2021

பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு மவுசு!

பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு மவுசு!

பயன்படுத்தப்பட்ட பழைய கார்களுக்கான விற்பனை 50 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது.

இந்தியாவில் வாகன விற்பனை இந்தப் பண்டிகை சீசனில் குறிப்பிடும்படியாக இருக்கவில்லை. குறிப்பாக கார் விற்பனை எதிர்பார்த்தபடி அமையவில்லை என்று வாகன உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்திருந்தனர். எனினும், முறைசார்ந்த பயன்படுத்தப்பட்ட கார் விற்பனைச் சந்தையைச் சேர்ந்த மகிந்திரா ஃபர்ஸ்ட் சாய்ஸ் வீல்ஸ், ஓ.எல்.எக்ஸ்., ட்ரூபில் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் இந்த ஆண்டில் கார் விற்பனை 50 சதவிகிதம் வரையில் வளர்ச்சி கண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளன. புதிய மாடல்கள் பல இந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டதால் அவற்றின் முந்தைய தயாரிப்புகளின் விலை கணிசமான அளவில் குறைந்திருந்தது. இதனால்தான் பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான விற்பனை அதிக வளர்ச்சியைச் சந்தித்ததாக அத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டின் ஜனவரி முதல் செப்டம்பர் வரையில் 27 புதிய மாடல் கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால் அதே வகை பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான விலை குறைந்துவிட்டதாகவும், அதனால் விற்பனை சூடுபிடித்ததாகவும், ஆன்லைன் பயன்படுத்தப்பட்ட கார் விற்பனை நிறுவனமான ட்ரூபில்லின் நிறுவனர் சுப் பன்சால், டி.என்.என். ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். சுஸுகி ஸ்விஃப்ட், ஹோண்டா சிட்டி மற்றும் மாருதி ஆல்டோ போன்ற கார்களின் விற்பனை சிறப்பாக இருந்ததாகவும் அவர் கூறினார். பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான விற்பனை கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 50 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளதாக மகிந்திரா ஃபர்ஸ்ட் சாய்ஸ் வீல்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியான அஷுடோஸ் பாண்டே தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 9 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon