மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

நமக்குள் ஒருத்தி: உதாசீனம் என்னும் கொடூரம்!

நமக்குள் ஒருத்தி: உதாசீனம் என்னும் கொடூரம்!

நவீனா

ஆண் பெண் இருபாலரில் ஒருபடி அதிகமாகவே உதாசீனமாக நடத்தப்படும் பாலினமாக பெண்களே இருக்கிறார்கள். ஆண்களிடம் பெரும்பாலும் ஒரு மனோபாவம் இருக்கும், 'என் மனைவி தானே, அவளிடம் எப்போது வேண்டுமானாலும் சண்டையிடலாம், எப்போது வேண்டுமானாலும் சமரசம் செய்துகொள்ளலாம்' என்பதே அந்த மனநிலை. அந்தப் புள்ளியிலிருந்துதான் புதிதாக மணமுடித்து வந்த வேறு ஒருவருடைய மகளை, உதாசீனமாக நடத்தும் பொருட்டு மனைவி என்கிற உரிமையை பயன்படுத்திக் கொள்கின்றனர்.

சிலர் இன்னும் ஒருபடி மேலே போய், மனைவியை என்னென்னவோ எல்லாம் கண்மூடித்தனமாக, மனதில் தோன்றிய வார்த்தைகள் அனைத்திலும் வசைபாடி விட்டு, பின்பு ஒரு முழம் மல்லிகைப் பூவுடன் வந்து, அவளைச் சமாதானப்படுத்த முயல்வதோடு, அவளும் அந்த நொடியே சமாதானமாகிவிட வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இந்தக் கலாச்சாரத்தைத் திரைப்படங்கள், கதைகள் மூலமாகவும் தொன்றுதொட்டுப் பரப்பிவருகின்றனர்.

உதாசீன மனப்போக்கு

பெண்கள் சண்டையிடுவதே இல்லை என்றோ, எந்த சண்டைக்கும் பெண்கள் காரணமாக இருப்பதே இல்லை என்றோ சொல்ல வரவில்லை. ஆனால் ஒவ்வொரு சண்டைக்குப் பின்னும், 'அவள் எங்கே போய்விடப் போகிறாள்?' என்கிற ஆண்களின் உதாசீன மனப்போக்கைப் பற்றித்தான் பேச வேண்டியிருக்கிறது. சண்டையிடும்போது அதில் ஆணுக்கும் சம்பந்தம் இருந்தாலும், பாதிப்பைப் பார்க்கும்போது பெண்ணுக்குத்தான் அதிகமாகத் தெரிகிறது. இயற்கையில் ஒரு பெண்ணின் உளவியல் உருவாக்கமும், அதைத் தொடர்ந்து நிகழும் படிநிலைகளும் சமூகம் பெண்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடும் அடக்குமுறைகளின் அடிப்படையிலேயே நிகழ்கின்றன. அதன் பொருட்டு, தனக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய சமூகத்தின் மீதே, அவள் பாதுகாப்பற்ற ஒரு மனநிலையை உணர ஆரம்பித்துவிடுகிறாள். தன் குடும்பத்தைப் பிரிந்து கணவன் வீட்டிற்கு வரும்போது நிலவும் புதிய சூழல்கள் இன்னும் அவள் மனதைப் பாதிக்கவே செய்யும்.

இதைப் பற்றி எல்லாம் அக்கறை கொள்ள வேண்டிய கணவனும் சண்டையிடும்போது, பெண்களுக்கு அது சுமக்க முடியாத பாரமாக மாறி, தான் வேறு எங்கோ இருப்பதாகவும், அது தனக்கான இடமோ அல்லது தன்னுடைய வீடோ இல்லை என உணர ஆரம்பித்துவிடுகின்றனர். அதன் காரணமாகவே சண்டைகளின் போதும், மற்ற நேரங்களிலும், தன் பிறந்த வீட்டைப் பற்றிக் குறிப்பிடும்போது 'எங்க வீடு' என்று உணர்வுபூர்வமாக பெண்கள் சொல்கின்றனர். ஆண்களும், 'உங்க வீட்டுக்குப் போ, உங்க வீட்டு ஆளுங்க எல்லாம் வராங்களா?' என்று மனைவியை தன் குடும்பத்திலிருந்து பிரித்து வைத்துப் பேசுவதோடு, அவர்கள் வேறு ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று கடைசிவரை அவர்களுக்கு உணர்த்திக்கொண்டுதான் இருப்பார்கள்.

உறவின் உரிமை என்னும் பெயரால்...

அந்த மனநிலையில் அடுத்த கட்டமாக, ஆண்கள், வீட்டிற்கு வெளியே நிகழும் பிரச்சினைகளையும், கோபங்களையும் வீட்டில் மனைவி குழந்தைகளிடம் காட்ட ஆரம்பிப்பார்கள். அதைப்பற்றி மனைவி கேள்வி எழுப்பும் பட்சத்தில், 'உன்கிட்ட உரிமை இருக்கிறதாலதான் என் கோபத்தை காட்டுறேன், வேற யார்கிட்ட போய் நான் காட்ட முடியும்?' என்று பதில் கேள்வி கேட்பார்களே தவிர, அவர்களின் தவற்றை உணர மாட்டார்கள். ஆனால் இதுபோன்ற சிறு நிகழ்வுகள்கூட இல்லற வாழ்வில் பிளவை ஏற்படுத்திவிடும் என்பதே உண்மை. ஆண்களின் கோபத்திற்குப் பெண்களே காலங்காலமாய் வடிகாலாக இருந்துவருகின்றனர். ஒவ்வொரு முறை சண்டையிலிருந்து சமாதானமாகும் பெண்கள், தங்கள் மனங்களில் தழும்புகளை மூடி மறைத்து வைக்கிறார்கள். ஆனால், அதை மறந்துவிடுவதோ, அதை முழுவதுமாக ஆற்றிக்கொள்வதோ, அவர்களால் இயலாத காரியமாகவே இருந்து வருகிறது.

இழப்பு என்னும் பரம்பரைச் சொத்து

கிரண் தேசாய் (Kiran Desai) எழுதி 2006ஆம் ஆண்டு வெளியான, 'த இன்ஹெரிடன்ஸ் ஆப் லாஸ்' (The Inheritance of Loss) என்னும் நாவல் மான் புக்கர் பரிசு உட்பட நிறைய பரிசுகளுக்காகப் பரிசீலிக்கப்பட்டுப் பாராட்டப்பட்ட நாவலாகும். இழப்பை மட்டுமே பரம்பரைச் சொத்தாக்கிக் கொண்டவர்களின் கதை என்பதே அந்தத் தலைப்பின் பொருள். அந்த நாவலில் ஜம்முபாய் படேல் என்ற ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி, அதன் மூலம் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளை பற்றியும் கிரண் பேச முற்பட்டு இருப்பார். 14 வயதான பேலா படேலை, வயதில் கொஞ்சம் மூத்தவரான ஜம்முபாய்க்கு மணமுடித்து வைத்துவிடுவார்கள். ஒரு சிறு குழந்தையைப் போல் அவர்களின் மணநாள் இரவன்று அழுதுகொண்டிருக்கும் தன் 14 வயது மனைவியை, அவளது விருப்பமின்றி ஜம்முபாய் வன்புணர்வு செய்துவிடுவார்.

பிறகு சில நாட்களில் மேற்படிப்பிற்காக லண்டன் செல்லும் ஜம்முபாய் ஒரு அந்நிய நாட்டவர் போல, அதாவது இங்கிலாந்துக்காரர் போலவே மாறிவிட ஆசைப்படுவார். நடை, உடை, பாவனை, பழக்க வழக்கம் எனத் தன்னை முற்றிலும் ஒரு அந்நிய நாட்டவர் ஆக மாற்றிக்கொண்டு, தான் ஓர் இந்தியன் என்கிற அடையாளத்தை முற்றிலும் துறந்துவிட வேண்டும் என்று பிரயத்தனப்படுவார். படிப்பை முடித்து நாடு திரும்பிய அவருக்கு இப்போது இந்தியப் பாரம்பரியத்தைப் பின்பற்றும் மனைவியைப் பிடிக்காமல் போய்விடும். அவள் ஒரு இந்தியப் பெண் என்பதையும் அவளது பழக்கவழக்கங்களையும் சேர்த்து அவளை முற்றிலுமாக வெறுக்க ஆரம்பிப்பார். அவளை மிகவும் உதாசீனமாக, தரக்குறைவாகவும் நடத்துவார். உணவுப் பொருட்களின் பெயர்களை ஆங்கிலத்தில் மனப்பாடமாகச் சொல்லும்வரை அவளுக்கு உணவு தர மாட்டேன் என்று சொல்லுவதில் ஆரம்பித்து, கழிவறைக்குள் இருக்கும் சிறுநீர் கோப்பைக்குள் அவள் முகத்தை அமிழ்த்தி அவளை அசிங்கப்படுத்துவது வரை, தன்னால் முடிந்தவரை உச்சபட்ச உதாசீனமாக நடத்தியும்கூட அவள் மேல் இருந்த வெறுப்பு தீராமல், அவளைக் கடைசியில் நெருப்பு வைத்துக் கொன்றும்விடுவார்.

இத்தனைக்கும் பேலா படேல், அந்தக் கதையில் குழந்தைகள் பெற்று வளர்த்த ஒரு தாயாகவும், அவர்களின் குழந்தைகளுக்குப் பாட்டியாகவும் புனைவு செய்யப்பட்டிருந்தாலும்கூட, ஒரு இந்தியப் பெண்ணாக மட்டுமே அவள் கணவனுக்குத் தெரிவாள். ஒட்டுமொத்த இந்திய தேசத்தின் மீது ஜம்முபாய் உருவாக்கிக்கொண்ட மொத்த வெறுப்பின் உருவமாக அவரின் மனைவி மட்டுமே அந்தக் கதையில் அவருக்குத் தென்படுவார்.

அந்தக் கதையில் மட்டுமல்ல, நிஜத்திலும் கணவனுக்கு நிகழும் கோபங்கள், அவமானங்கள், வெறுப்புகள் அனைத்தையும் கொட்டித் தீர்க்கும் வடிகாலாகவே பெண்கள் பார்க்கப்பட்டு வருகின்றனர். இந்த அளவுக்கு மிகவும் கொடூரமான செயல்களைப் பெரும்பாலான ஆண்கள் பெண்களுக்குச் செய்வதில்லை என்பது உண்மைதான் என்றாலும், இது போன்ற நிகழ்வுகள் நடப்பதே இல்லை என்று அறுதியிட்டுக் கூறுவதற்கில்லை என்பதே உண்மை.

முழு அதிகாரத்தையும் பெண்கள் மீது செலுத்தி அவர்களின் மனங்களைப் புண்படுத்துவதை விட, அவர்கள் மீது முழுமையான அன்பைக் காட்டி அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க முயல்வதே, குடும்பத்தின் மகிழ்ச்சிக்கும் வித்திடும் எளிமையான வழியாக இருக்கும்.

இன்னும் பறக்கலாம்!

(தொடரின் அடுத்த பகுதி வரும் திங்களன்று வெளியாகும் - ஆசிரியர்)

(கட்டுரையாளர் நவீனா, ஆங்கிலப் பேராசிரியர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர். சமூகப் பிரச்சினைகள், பெண்ணியம், இலக்கியம் சார்ந்த படைப்புகளை எழுதிவருகிறார். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

தொடரின் முதல் பகுதி

பகுதி 2

பகுதி 3

பகுதி 4

பகுதி 5

பகுதி 6

பகுதி 7

பகுதி 8

பகுதி 9

பகுதி 10

பகுதி 11

பகுதி 12

பகுதி 13

பகுதி 14

பகுதி 15

பகுதி 16

வெள்ளி, 9 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon