மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 1 டிச 2020

சரோஜா தேவியாக அனுஷ்கா?

சரோஜா தேவியாக அனுஷ்கா?

நடிகை சரோஜா தேவி கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகை அனுஷ்காவை அணுகியுள்ளனர் என் டி ஆர் படக்குழுவினர்.

மறைந்த ஆந்திர முதல்வரும், தெலுங்கு நடிகருமான என் டி ராமராவ் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தயாராகிறது. இந்தப் படத்தை 2 பாகங்களாக எடுக்கின்றனர். இப்படத்தைத் தேசிய விருது பெற்ற இயக்குநர் கிரிஷ் இயக்கி வருகிறார்.

இத்திரைப்படத்தில் என் டி ஆராக நடித்துக் கொண்டிருப்பது என் டி ஆரின் மகனும், நடிகருமான பாலகிருஷ்ணா. என் டி ஆர் மனைவி பசவதாரகமாக நடிகை வித்யா பாலன் நடித்து வருகிறார். இவர்களுடன் என் டி ஆரின் அரசியல் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத நபரும், தற்போதைய ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு கதாபாத்திரத்தில் ராணா டகுபதியும், கிருஷ்ணாவாக மகேஷ்பாபுவும் நடித்துள்ளனர்.

என் டி ராமராவுடன் பல படங்களில் ஜோடி சேர்ந்து நடித்த சாவித்திரி வேடத்தில் நித்யாமேனனும் ஸ்ரீதேவியாக ரகுல் ப்ரீத் சிங்கும் நடிக்கின்றனர். இதுபோல் என்.டி.ராமராவ் உடன் ஜோடியாக நடித்துள்ள சரோஜாதேவி வேடத்துக்கும் நடிகை தேர்வு நடக்கிறது. என்.டி.ராமராவ் வாழ்க்கை கதையில் சரோஜாதேவி வேடத்தில் நடிக்கும்படி அனுஷ்காவை படக்குழுவினர் அணுகி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பல நட்சத்திர பிரபலங்கள் நடித்து வரும் இப்படத்தில் விரைவில் அனுஷ்காவும் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சரோஜாதேவி தமிழ், கன்னடம், தெலுங்கில் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அன்றைய காலகட்டத்தில் இந்திய பட உலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். தமிழில் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் உள்ளிட்டோருக்கு ஜோடியாகவும் அதிக படங்களில் நடித்தார். அபிநய சரஸ்வதி, கன்னடத்துப் பைங்கிளி என்ற பட்டப் பெயர்களில் அழைக்கப்பெற்றார்.

வெள்ளி, 9 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon