செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்காமல் மருத்துவர்கள் தாமதம் செய்ததாகக் கூறி, சிலர் அங்கிருந்த ஒரு மருத்துவரைத் தாக்கினர். இதனையடுத்து, நேற்றிரவு அங்கு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த சதுரங்கப்பட்டினத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர், நேற்று (நவம்பர் 9) மாலை மதுபோதையில் கழுத்தை அறுத்துத் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அதன் பின்னர், தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்குள்ள மருத்துவர்கள், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு வெங்கடேஷை அனுப்பியுள்ளனர்.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு வெங்கடேஷ் சென்றபோது, பெண் மருத்துவர் ஒருவரும், கார்த்திக் என்ற ஒரு உதவி மருத்துவரும் அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
நேற்று மாலை 5.30 மணிக்குச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சென்றுள்ளார் வெங்கடேஷ். இரவு 7 மணியாகியும், அவருக்குச் சிகிச்சை அளிக்கப்படவில்லை. அதே நேரத்தில், மற்ற நோயாளிகளுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளித்துவந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேஷ், தனக்கு முதலில் சிகிச்சை அளிக்குமாறு அங்குள்ள மருத்துவர்களிடம் கூறியுள்ளார்.
வாக்குவாதம் அதிகமாகவே, ஒருகட்டத்தில் கார்த்திக் என்ற மருத்துவரைத் தாக்கியுள்ளார் வெங்கடேஷ். அவரது நண்பர்களும் அந்த மருத்துவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. தாக்குதலில் காயமடைந்த மருத்துவர் கார்த்திக், உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவரைத் தாக்கியதைக் கண்டித்து, நேற்றிரவு செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அரசு மருத்துவமனையின் முதல்வர் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்படி வெங்கடேஷையும், அவரது நண்பர்கள் இருவரையும் கைது செய்தனர் போலீசார்.