மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

மாநில அளவிலான கூட்டணி: சிதம்பரம் யோசனை!

மாநில அளவிலான கூட்டணி: சிதம்பரம் யோசனை!

மாநில அளவிலான கூட்டணி அமைப்பது காங்கிரஸ் கட்சிக்குப் பலனை தரும் என ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

பணமதிப்பழிப்பு அறிவிக்கப்பட்ட தினத்தை துக்க தினமாக காங்கிரஸ் கடைப்பிடித்து வருகிறது. அந்த வகையில், கொல்கத்தாவில் நேற்று (நவம்பர் 8) செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், “பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் கள்ள நோட்டுக்கு முடிவு ஏற்படவில்லை. 99.3 சதவிகிதம் பணம் ரிசர்வ் வங்கிக்குத் திரும்பியுள்ளது. தனித்துவமாக வடிவமைக்கப்பட அதிகாரபூர்வ பண மோசடி திட்டம்தான் பணமதிப்பழிப்பு நடவடிக்கை.

2018-2019ஆம் ஆண்டுக்கான 3.3% நிதி பற்றாக்குறை இலக்கை அரசாங்கத்தால் எதிர்கொள்ள முடியாது. பிரிவு 7இன் கீழ் மத்திய அரசுக்கு ரூ.1 லட்சம் கோடியை ரிசர்வ் வங்கியில் இருந்து பரிமாற்றம் செய்ய அரசு திட்டமிட்டு வருகிறது. இந்நேரத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு இரண்டு வழிகள் மட்டுமே உள்ளது. ஒன்று அரசு சொல்படி கேட்பது அல்லது பதவியை ராஜினாமா செய்வது. எந்த வழியைப் பின்பற்றினாலும், ஒரு முக்கிய நிறுவனம் தனது புகழை இழக்கும்.

பாஜக வளர்ச்சியை, வேலைவாய்ப்பைப் பற்றி பேசவில்லை, இந்துத்துவ கொள்கைகளைப் பற்றியே பேசுகிறது. சர்ச்சைக்குரிய விஷயங்களில் பிரதமர் மோடி எதுவும் கூறுவதில்லை. ஆனால், ஆர்எஸ்எஸ், மத்திய அமைச்சர்கள் ஆகியோர் பிரிவினையை பற்றியே பேசியும் எழுதியும் வருகின்றனர்.

இதையெல்லாம் மக்கள் கருத்தில்கொண்டு வாய்ப்பு கிடைக்கும்போது முடிவு எடுப்பார்கள். கர்நாடக இடைத் தேர்தல் இதற்கு ஒரு சாட்சியமாகும்” என்று பேசினார்.

பெரிய சிலைகள், கோயில்கள் கட்டுவது என இந்துத்துவாவின் பழைய கொள்கைகளுக்கே அவர்கள் திரும்பி செல்கின்றனர் என்றும் விமர்சித்தார்.

கூட்டணி குறித்து பேசுகையில், “மாநில அளவிலான கூட்டணியே காங்கிரஸுக்குப் பலன் தரும் என நான் எண்ணுகிறேன். பாஜகவைத் தோற்கடிப்பதற்கு சிறந்த வழியும் இதுவே, கர்நாடகாவில் இந்தத் திட்டம் நல்ல முடிவைத் தந்தது” என்று பதிலளித்தார்.

வியாழன், 8 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon