மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

அலுவலகங்களில் சிசிடிவி: வனத் துறைக்கு உத்தரவு!

அலுவலகங்களில் சிசிடிவி: வனத் துறைக்கு உத்தரவு!

மக்கள் நடமாட்டத்தில் இருந்து விலகியிருக்கும், பெண்கள் பணிபுரியும் வனத் துறை அலுவலகங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தக் கோரிய வழக்கில் வனத் துறை இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

கோவை மாவட்டம் மதுகரையில் உள்ள வனச்சரகர் அலுவலகத்தில் தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்த சகாயா ஜெசிந்தா என்ற பெண், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், அந்த அலுவலகத்தில் வனப் பாதுகாவலராக இருந்த கண்ணன் என்பவர் தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகத் தெரிவித்திருந்தார். “இது தொடர்பாக கோவை மாவட்ட வன அலுவலர் நியமித்த சிறப்பு விசாகா கமிட்டியிடம் புகார் கொடுத்தேன். விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே கண்ணன் தமிழ்நாடு வன அலுவலர் சங்கத்தைப் பயன்படுத்தி விசாரணைக்கு இடையூறு செய்துவந்தார். இந்த விசாகா குழுவில் உள்ள மாவட்ட வனத் துறைக் கண்காணிப்பாளர் கலாமணி என்பவர், ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட்டார். இது உச்ச நீதிமன்றம் அளித்த விசாகா தீர்ப்புக்கு எதிரானது. எனவே கண்காணிப்பாளரான கலாமணியை இடமாற்றம் செய்ததை ரத்து செய்து, அவர் மீண்டும் விசாகா குழுவில் சேர்க்கப்பட்டு விசாரணை நடத்த வேண்டும். அதே போன்று, பெண்கள் பணிபுரியும் வனத் துறை அலுவலகங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும்” என்று சகாய ஜெசிந்தா தனது மனுவில் கூறியிருந்தார்.

நேற்று (நவம்பர் 8) நீதிபதி விமலா முன்பு இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. இது தொடர்பாகத் தமிழக வனத் துறை இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார் நீதிபதி.

வியாழன், 8 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon