மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

கொடி: கறுப்பு, சிவப்பை யாரும் உரிமை கோர முடியாது!

கொடி: கறுப்பு, சிவப்பை யாரும் உரிமை கோர முடியாது!

“கட்சிக் கொடியில் கறுப்பு, சிவப்பு நிறத்தைப் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்று யாரும் உரிமை கோர முடியாது” என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் டிடிவி. தினகரன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மதுரை மேலூரில் கடந்த மார்ச் 15ஆம் தேதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தினகரன் தொடங்கினார். கட்சிக் கொடியையும் அவர் அறிமுகப்படுத்தினார். கறுப்பு, சிவப்பு மற்றும் நடுவில் வெள்ளை வண்ணத்துடன் இந்தக் கொடி அமைந்திருந்தது. இதன் நடுவில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவம் இருந்தது. ஆனால், இந்தக் கொடியானது தங்கள் கொடியை ஒத்திருப்பதாக அதிமுகவினர் குற்றம்சாட்டினர்.

கொடியைப் பயன்படுத்த தினகரனுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

“கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தினகரன், அதிமுகவின் புகழை நேர்மையற்ற வகையில் பயன்படுத்த முயற்சி செய்கிறார். மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில், அதிமுக கொடியைப் போல தன் கட்சிக் கொடியை வடிவமைத்துள்ளார். ஜெயலலிதாவின் படத்தையும், அம்மா என்ற பெயரையும் பயன்படுத்தி, தன்னை ஜெயலலிதாவின் வாரிசு போல காட்ட முயற்சி செய்கிறார்” என எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நேற்று (நவம்பர் 8) நீதிபதி கல்யாணசுந்தரம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தினகரன் தரப்பிலிருந்து கூடுதல் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், “கறுப்பு சிவப்பு நிறம் என்பது தமிழகத்தில் தவிர்க்க முடியாதது” என்று குறிப்பிட்டுள்ளார்.

“பெரியார் ,அண்ணா, எம்ஜிஆர் காலங்களில் இருந்து கறுப்பு, சிவப்பு நிறம் பயன்படுத்தப்பட்டு வருகி்றது. கட்சிக் கொடியில் கறுப்பு, சிவப்பு நிறம் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்று யாரும் உரிமை கோர முடியாது” என்று தனது மனுவில் தெரிவித்துள்ள தினகரன், எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் .

இதனையடுத்து வழக்கை ஒத்திவைத்த நீதிபதி, இறுதி விசாரணை இரண்டு வாரங்களுக்குப் பிறகு நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

வியாழன், 8 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon