மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 26 மே 2020

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: 12 பேர் பலி!

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: 12 பேர் பலி!

கலிபோர்னியாவிலுள்ள மதுபான விடுதியொன்றில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலியாகினர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள தவுசண்ட் ஓக்ஸ் நகரில் உள்ளது பார்டர்லைன் மதுபான விடுதி. நேற்று முன்தினம் (நவம்பர் 7) அந்த மதுபான விடுதிக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர், தனது கையில் இருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கிச் சுட்டார். இதில் பலர் படுகாயமடைந்ததாக, முதலில் தகவல் வெளியானது.

தகவல் அறிந்து, அங்கு விரைந்து சென்றனர் போலீசார். அந்த மர்ம நபரைச் சுற்றிவளைத்துச் சுட்டுக் கொன்றனர். இந்தத் தாக்குதலில் அந்த நபர் உட்பட 13 பேர் பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 20க்கும் மேற்பட்டோர் இதில் படுகாயமடைந்தனர்.

பார்டர்லைன் விடுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டபோது, கல்லூரி மாணவர்களின் நிகழ்ச்சியொன்று நடந்துகொண்டிருந்தது. இந்த நிலையில், அங்கு தாக்குதலை நிகழ்த்தியுள்ளார் அந்த மர்ம நபர்.

தகவல் அறிந்து மூன்று நிமிடத்துக்குள் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசாருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் கடவுள் ஆசீர்வதிக்க வேண்டுமென்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் விரைவாக நடவடிக்கை மேற்கொண்ட அமெரிக்க சட்ட அமலாக்கத் துறைக்கு நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கி சத்தம் கேட்டு, டெபுடி சார்ஜெண்ட் ரான் ஹெலுஸ் என்பவர் அந்த விடுதிக்குள் நுழைந்தார். அவரது முயற்சியினால், அங்கிருந்த பலரது உயிர் காப்பாற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மர்ம நபரின் தாக்குதலுக்கு ஆளான ஹெலுஸ், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தத் தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வியாழன், 8 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon