மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 11 ஜூலை 2020

இன்ஸ்டகிராமின் ‘இந்தி’ய ப்ளான்!

இன்ஸ்டகிராமின் ‘இந்தி’ய ப்ளான்!

இந்தியாவில் வலுவாகக் காலூன்றும் விதமாக தொடர் முயற்சிகளை எடுத்துவருகிறது இன்ஸ்டகிராம் நிறுவனம்.

உலகளவில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் இன்ஸ்டகிராமைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புகைப்படங்களைப் பதிவிடுவதற்கென்றே பிரத்யேகமாக இயங்கும் இதை இந்தியாவில் பயன்படுத்துவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. தொடக்கத்தில் மேட்டுக்குடி மக்களுக்கான ஒரு தளம் எனப் பரவலான அறிமுகத்தைக் கொண்டிருந்த இதை தற்போது இந்தியாவில் பல்வேறு தரப்பினரும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.

இந்திய மக்கள் தமது நிறுவனத்துக்குத் தொடர்ந்து கொடுத்துவரும் ஆதரவைத் தக்கவைக்கும் முயற்சியாகத் தொடர்ந்து பல திட்டங்களை வகுத்துவரும் இன்ஸ்டகிராம், அதில் புதிய முயற்சியாக இந்தி மொழியிலும் இதைப் பயனர்கள் பயன்படுத்திக்கொள்ளும் விதமாக ஒரு புதிய வசதியைத் தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் அதிகம் பேரால் பேசப்படுவது இந்திதான் எனும் காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

இந்த நிறுவனம் மட்டுமல்ல அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் தமது புதிய தயாரிப்புகளை இந்தியாவுக்கு உகந்த வகையில் இந்தியில்தான் மாற்றியமைத்து வருகின்றன எனும் விஷயமும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்தி வசதி அறிமுகமானாலும் எல்லா மொபைலிலும் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. குறிப்பிட்ட சில ஆண்ட்ராய்டு மொபைல்களில் மட்டுமே தற்போது இது சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் மற்ற போன்களிலும் இந்த வசதி வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெர்டிகள் வீடியோக்களையும் பார்க்கும் வசதியை அறிமுகப்படுத்தியது, குறைந்த வசதிகள் கொண்ட ஆண்ட்ராய்டு பயனாளர்களும் பயன்படுத்தத்தக்கவகையில் இன்ஸ்டகிராம் லைட் எனும் வசதியை வழங்கியது... இதுபோன்ற இன்ஸ்டகிராம் அறிமுகப்படுத்திய சமீபத்திய வசதிகளால் இந்தியாவில் பெருமளவு கவனத்தைப் பெற்றுள்ள இந்நிறுவனம் இந்தி அறிமுகத்தாலும் கூடுதல் கவனத்தைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளி, 9 நவ 2018

chevronLeft iconமுந்தையது