மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 5 ஏப் 2020

திருவண்ணாமலை: செல்போனுக்குத் தடை!

திருவண்ணாமலை: செல்போனுக்குத் தடை!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகையை முன்னிட்டு, திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோயிலில் மகா தீபத் திருவிழா வரும் 14ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. வரும் 11ஆம் தேதியன்று துர்கையம்மன் உற்சவமும், 12ஆம் தேதியன்று பிடாரியம்மன் உற்சவமும், 13ஆம் தேதியன்று விநாயகர் உற்சவமும் நடைபெறுகிறது. இதையடுத்து, 14ஆம் தேதி அதிகாலை 5 மணி முதல் 6.15 மணிக்குள் அண்ணாமலையார் கோயில் மூன்றாம் பிராகாரத்தில் உள்ள தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெறும். 10 நாட்கள் நடைபெறும் தீபத் திருவிழாவில் ஆறாம் நாளன்று வெள்ளித் தேரோட்டமும், ஏழாம் நாளன்று மகா தேரோட்டமும் நடைபெறவுள்ளது.

24ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயில் சுவாமி சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும். மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர அண்ணாமலை மீது மகா தீபம் ஏற்றப்படும். அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

மகா தீபத்தின்போது அருணாசலேஸ்வரர் கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல அதிரடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயில் சார்பில் வழங்கப்படும் உபயதாரர் அனுமதிச் சீட்டில் பார் கோடு வசதி இடம்பெறுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதனை ஸ்கேன் செய்த பிறகே கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, 2,000 பேர் மலை மீது ஏறி தீப தரிசனம் செய்ய அனுமதிச் சீட்டு வழங்கப்படுகிறது.

வியாழன், 8 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon