மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 11 ஜூலை 2020

அடுத்த இலக்கு இயக்குநர் சங்கமா?

அடுத்த இலக்கு இயக்குநர் சங்கமா?

எந்தக் கனவோடு நடிகர் விஷால் திரைத் துறையில் காலடி எடுத்து வைத்தாரோ அந்தக் கனவு சாத்தியமாகும் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது.

நடிகரும் இயக்குநருமான அர்ஜுனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துவந்த விஷாலுக்கு இயக்குநராவதே லட்சியமாக இருந்தது. ஆனால் காலமும் சூழலும் அவரை 'செல்லமே' படத்தின் வாயிலாக நடிகராக்கிவிட கடகடவென்று 25 படங்களில் நடித்து முடித்துவிட்டார் விஷால்.

இந்த இடைப்பட்ட காலத்திற்குள் விஷால் எடுத்த பரிமாணங்கள் பல. நடிகர் சங்கத் தேர்தலில் செயலாளர் பதவிக்கு நின்று வெற்றிபெற்று மொத்தக் கவனத்தையும் தன் பக்கம் இழுத்தது, தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக மாறியது, விஷால் ஃபிலிம் ஃபேக்டரி எனும் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியது, ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் களமிறங்க ஆயத்தமானது, திருட்டு விசிடிக்கு எதிராக களப்பணி ஆற்றியது, டிவியில் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக மாறியது என இன்றைய தேதியில் பிஸி மனிதராக வலம்வரும் சினிமா நட்சத்திரம் விஷாலாகத்தான் இருக்கும்.

இப்படியாகப் பல விஷயங்களைக் காலத்தின் போக்கில் கைகொண்ட விஷால் இயக்கம் பக்கம் மட்டும் செல்லாமல் இருந்துவந்தார். தற்போது அந்தப் பணியையும் கையிலெடுத்துள்ளார் விஷால். அதன்படி விலங்குகளை மையமாகக் கொண்டு ஹாலிவுட் பட பாணியில் ஒரு படத்தை அவர் இயக்கவிருக்கிறார்.

விலங்குகளை மையமாகக் கொண்ட படமென்பதால் விலங்குகள் நல ஆர்வலரான த்ரிஷா இந்தப் படத்தில் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2019இன் தொடக்கத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கவுள்ளன. விஷால் முதன்முறையாகப் படம் இயக்குவதால் இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதுபோலவே இயக்குநராக அவர் மாறவிருப்பதால் விஷாலின் அடுத்த இலக்கு இயக்குநர்கள் சங்கமாகக்கூட இருக்கலாம் எனவும் பேசப்பட்டு வருகிறது.

வியாழன், 8 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon