மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 6 ஆக 2020

புதுச்சேரி எம்.எல்.ஏ தகுதி நீக்கம்!

புதுச்சேரி எம்.எல்.ஏ தகுதி நீக்கம்!

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ அசோக் ஆனந்த்தை தகுதி நீக்கம் செய்து புதுவை சபாநாயகர் வைத்திலிங்கம் உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த். இவரது தந்தை ஆனந்த் 2007-08 ஆண்டுகளில் புதுச்சேரி அரசின் பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளராகப் பணியாற்றியபோது, வருமானத்துக்கு அதிகமாக 3.15 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக அவர் மீது புகார் எழுந்தது. இதனையடுத்து ஆனந்த், அவரது மகனும் சட்டமன்ற உறுப்பினருமான அசோக் ஆகியோர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் புதுச்சேரி சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது.

இதுதொடர்பான வழக்கில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய புதுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம், சட்டமன்ற உறுப்பினர் அசோக் மற்றும் அவரது தந்தை ஆனந்த் ஆகியோர் குற்றவாளி எனத் தெரிவித்தது. மேலும் தந்தை, மகன் இருவருக்கும் தலா ஒரு வருடம் சிறை தண்டனையும், தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத்தைக் கட்டத் தவறினால் மேலும் மூன்று மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், வருமானத்துக்கு அதிகமாகச் சேர்க்கப்பட்ட சொத்துகளைப் பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டது.

தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், சட்டமன்ற உறுப்பினர் ஆனந்த்தை தகுதி நீக்கம் செய்து புதுவை சபாநாயகர் வைத்திலிங்கம் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக புதுச்சேரி சட்டப்பேரவைச் செயலகம் நேற்று (நவம்பர் 8) வெளியிட்டுள்ள உத்தரவில், “சொத்துக் குவிப்பு வழக்கில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறை தண்டனை பெற்றதால் அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இதனால் தீர்ப்பு வழங்கப்பட்ட கடந்த மாதம் 30ஆம் தேதி முதல் தட்டாஞ்சாவடி தொகுதி காலியாக இருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 9 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon