மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 29 நவ 2020

காஷ்மீர்: பிடிபட்டது 50 கிலோ ஹெராயின்!

காஷ்மீர்: பிடிபட்டது 50 கிலோ ஹெராயின்!

காஷ்மீரில் இருந்து டெல்லிக்குக் கடத்தப்பட்ட 50 கிலோ ஹெராயினைக் கைப்பற்றியுள்ளது தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் இருந்து டெல்லியின் வடக்குப் பகுதியான ஆசாத்பூர் மந்திக்கு ஒரு லாரி புறப்பட்டுச் சென்றது. அதில் ஆப்பிள் பழங்கள் நிரப்பப்பட்ட பெட்டிகள் அடுக்கப்பட்டிருந்தன. நேற்று (நவம்பர் 8) ஜம்மு தேசிய நெடுஞ்சாலையிலுள்ள சுங்கச்சாவடி ஒன்றில் அந்த வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது. அதில் சோதனையிட்டபோது, 50.10 கிலோ எடையுள்ள ஹெராயின் ஆப்பிள் பழங்களுக்கு இடையே மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 250 கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வாகனத்தைச் சோதனையிடும் நடவடிக்கையில், தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுடன் ஜம்மு காஷ்மீர் போலீசாரும் இணைந்து செயல்பட்டனர்.

இந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட லாரி ஓட்டுநர் பிடிபட்டுள்ளார். இவரிடம் விசாரணை நடந்து வருவதாகத் தெரிவித்துள்ளது ஜம்மு காஷ்மீர் காவல் துறை. இது தொடர்பாக, குப்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு.

விசாரணை தொடர்ந்து வருவதால், இதில் தொடர்புடைய மேலும் பலர் கைதாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வியாழன், 8 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon