மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 21 அக் 2020

பணமதிப்பழிப்பு: தனிநபரால் நிகழ்த்தப்பட்ட பேரிடர்!

பணமதிப்பழிப்பு: தனிநபரால் நிகழ்த்தப்பட்ட பேரிடர்!

“பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு தனி மனிதரால் நிகழ்த்தப்பட்ட பேரிடர்” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இதே நாளில் தொலைக்காட்சிகளில் தோன்றிய பிரதமர் நரேந்திர மோடி, 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அதிரடியாக அறிவித்தார். கறுப்புப் பண ஒழிப்பு, கள்ள நோட்டுக்களை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த அறிவிப்பை முதலில் வரவேற்ற அனைவரும், சில நாட்களுக்குப் பிறகு கடுமையான எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர். புதிய ரூபாய் நோட்டுக்களை வாங்குவதற்காக பல மணி நேரம் வங்கிகள் முன்பு மக்கள் காத்திருந்தனர். வரிசையில் நின்றபோது உயிரிழப்புகளும் நிகழ்ந்தன.

பணமதிப்பழிப்பின்போது திரும்பப் பெறப்பட்ட ரூபாய் நோட்டுக்களை எண்ணும் பணி கடந்த ஆகஸ்ட் மாதம் முடிந்த நிலையில், ரூ.13,000 கோடி மட்டுமே இன்னும் திரும்ப வரவில்லை என்று ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து பணமதிப்பழிப்பின் மூலம் கறுப்புப் பணம் வெள்ளையாகிவிட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

இந்த நிலையில் பணமதிப்பழிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்று (நவம்பர் 8) மூன்றாமாண்டு துவங்கவுள்ளது. இதுதொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “நாட்டு மக்கள் அனைவரையும் நடுத்தெருவுக்கு தள்ளிய பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் இரண்டாம் ஆண்டு இன்று. வங்கிகளில் முடிவே இல்லாத நீண்ட வரிசையில் மக்களை நிற்க வைத்து அலைக்கழித்ததோடு, வங்கி வாசலிலேயே அப்பாவி மக்கள் பலர் தங்கள் உயிரை இழந்த கொடுமையை இந்த நாடு மறவாது. அதுமட்டுமா, இலட்சக்கணக்கில் வேலை வாய்ப்பு பறிபோனதோடு, சிறு - குறு நிறுவனங்கள் மூடு விழா கண்டு, நாட்டின் பொருளாதாரமே பின்னோக்கி தள்ளப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாட்டின் அழிவுக்கு வழிவகுத்த பணமதிப்பழிப்பு நடவடிக்கை ஒரு தனி மனிதரால் நிகழ்த்தப்பட்ட பேரிடர் என்றும் அவர் விமர்சனம் செய்துள்ளார்.

வியாழன், 8 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon