மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 21 அக் 2020

எய்ம்ஸ் எப்போது அமையும்: நீதிமன்றம் கேள்வி!

எய்ம்ஸ் எப்போது அமையும்: நீதிமன்றம் கேள்வி!

எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என சுகாதாரத் துறைச் செயலருக்குக் கேள்வி எழுப்பியுள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று மத்திய அரசு தெரிவித்ததைத் தொடர்ந்து, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்குவதற்கான கட்டுமானப் பணிகளில் தாமதம் ஏற்படுவதாக, ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதில், பல்வேறு மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைப் பணிகள் தொடங்கப்பட்டு விட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். “மதுரை தோப்பூரில் இதுவரை எந்தப் பணிகளும் தொடங்கப்படவில்லை. எனவே, மதுரை தோப்பூரில் தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளது என அரசிதழில் மத்திய அரசு வெளியிட வேண்டும். அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி, இதற்கு ஓப்புதல் பெற வேண்டும்.

கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தத்தை விரைவுபடுத்தவும், எய்ம்ஸ் மருத்துவமனைக்குத் தேவையான நிதியை உடனடியாக ஒதுக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று அவர் தனது மனுவில் கூறியிருந்தார். கடந்த மாதம் நடந்த விசாரணையின்போது, இது குறித்து விளக்கம் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.

இந்நிலையில் இந்த வழக்கு மீதான விசாரணை இன்று (நவம்பர் 8) மீண்டும் மதுரைக் கிளையில் நடந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மதுரை தோப்பூரில்தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று உறுதி அளித்தார்.

இதையடுத்து, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வரும் டிசம்பர் 6ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மத்தியச் சுகாதாரத் துறைச் செயலருக்கு உத்தரவிடப்பட்டது. எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும்?, எப்போது முடிவடையும்? ஆகிய தகவல்கள் அறிக்கையில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று நீதிபதிகளின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வியாழன், 8 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon