மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 4 ஜூலை 2020

பணமதிப்பழிப்பு நடவடிக்கை எதற்காக? நிதியமைச்சர்!

பணமதிப்பழிப்பு நடவடிக்கை எதற்காக? நிதியமைச்சர்!

“இந்தியப் பொருளாதாரத்தை முறைப்படுத்தவே பண மதிப்பழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டோம்” மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தது. இந்த திடீர் அறிவிப்பால் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகினர். பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் இரண்டாண்டுகள் நிறைவடைகின்றன.

“இந்த நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் மோசமடைந்துவிட்டது, பிரதமர் சொன்னது போன்ற வளர்ச்சி இல்லை. எனவே மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்” என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. நாளை நாடு முழுவதும் காங்கிரஸ் ஆர்ப்பாட்டமும் நடத்தவுள்ளது.

பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இன்று மூன்றாமாண்டு துவங்கியுள்ள நிலையில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி "பண மதிப்பழிப்பின் தாக்கங்கள்" என்ற தலைப்பில் தன் முகநூல் பக்கத்தில் கட்டுரை ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர், "இந்திய பொருளாதாரத்தை முறைப்படுத்தவே பண மதிப்பழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டோம். இந்த நடவடிக்கை வரி ஏய்ப்பு நடக்காமல் தடுக்க உதவியது. மேலும் கூடுதலாக மக்கள் வரி செலுத்த ஆரம்பித்ததால், அந்த ஆதாரத்தைக் கொண்டு நாட்டின் உள்கட்டமைப்பு, சமூக நலத் திட்டங்கள் மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்குச் செலவிடப்பட்டன. அதிகமான வருவாய், நிறைய வரி ஆதாரங்கள் மூலம் சிறப்பான உள்கட்டமைப்பையும், சிறந்த வாழ்வாதாரத்தையும் குடிமக்களுக்கு வழங்க முடிந்தது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “பணமதிப்பழிப்பின் மூலம் ஒட்டுமொத்த பணமும் வங்கிகளுக்கு வந்துவிட்டதாகத் தவறான ஒரு குற்றச்சாட்டை முன் வைத்து விமர்சித்து வருகிறார்கள். இது பணத்தை தடை செய்வது பணமதிப்பழிப்பின் நோக்கம் கிடையாது. பணத்தை ஒழுங்கான பொருளாதாரத்தின் கீழ் கொண்டு வரவும், புதிதாக வரி செலுத்துவோரை உருவாக்குவதுமே இதன் நோக்கமாக இருந்தது” என்று அருண் ஜேட்லி விளக்கியுள்ளார்.

வியாழன், 8 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon