மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 18 ஜன 2020

போராட்டக் களமாகும் திரையரங்குகள்!

போராட்டக் களமாகும் திரையரங்குகள்!

சர்கார் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வலியுறுத்தியும் தமிழகத்தில் பல இடங்களில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது தேசத் துரோக சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலர் தேவராஜன் ஏ.ஆர்.முருகதாஸ் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அந்த புகாரில், “சர்கார் திரைப்படம் மூலம் ஏ.ஆர்.முருகதாஸ் இலவச பொருட்களை தீயிட்டு கொளுத்திய காட்சி தமிழக அரசை இழிவுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட காட்சி ஆகும். ஏ.ஆர்.முருகதாஸ் திரைப்படம் மூலம் அரசுக்கு எதிரான குற்றத்தை விதைத்துள்ளார். ஆகவே இந்திய குற்றவியல் சட்டம் (தேசதுரோகச் சட்டம்) பிரிவு 124-ஏவின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை ஆணையாளர் அவர்களை கேட்டுக்கொண்டு பணிவுடன் இந்த புகார் மனுவை தாக்கல் செய்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மதுரையில் சர்கார் திரையிடப்படும் சினிபிரியா, மினிபிரியா, சுகப்பிரியா திரையரங்கம் முன் சட்ட மன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தலைமையில் அதிமுகவினர் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து திரையரங்குகளில் சர்கார் படத்தின் பிற்பகல் 2.30 மணி காட்சி ரத்து செய்யப்பட்டது. போராட்டத்தின் போது பேசிய ராஜன் செல்லப்பா, “சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிய பின்னரே படத்தைத் திரையிட வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும். மதுரை மாவட்ட திரையரங்கு உரிமையாளர்களையும், விநியோகஸ்தர்களையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் சர்கார் திரைப்படம் திரையிடப்படும் மூன்று திரையரங்குகளில் வைக்கப்பட்ட பேனர்கள் மர்ம நபர்களால் கிழிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விஜய் ரசிகர்கள் திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

கோவை ரயில் நிலையம் அருகே உள்ள சாந்தி திரையரங்கு முன் சர்கார் பேனர்களை கிழித்தும் அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அதிமுகவினர் சர்கார் திரையிடப்பட்ட ராஜேஸ்வரி திரையரங்கில் வைக்கப்பட்ட பேனர்களை கிழித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விஜய் ரசிகர்கள் திரையரங்கின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காவல்துறையினர் விஜய் ரசிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகக் கூறினர்.

சென்னை, காசி திரையரங்கின் முன் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். ‘சர்கார் படத்தை தடை செய்’ என்று கோஷமிட்ட அவர்கள் சர்கார் படத்தின் பிரம்மாண்ட பேனர்களை கிழித்தனர்.

சர்கார் படத்தை முன்வைத்து சர்ச்சைகளும் விவாதங்களும் எழுந்த நிலையில் தற்போது போராட்டம், பேனர் கிழிப்பு என படத்திற்கு எதிர்ப்பு வலுவடைந்துள்ளது. சென்னை காவல் ஆணையரின் அறிவுறுத்தலின்படி நகரில் சர்கார் திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகளில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 8 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon