மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 17 செப் 2019

அத்வானி பிறந்தநாள்: மோடி வாழ்த்து!

அத்வானி பிறந்தநாள்: மோடி வாழ்த்து!

பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கடந்த 1927 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி பாகிஸ்தானில் பிறந்தார். பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான அத்வானி, நாட்டின் 7 ஆவது துணை பிரதமராக பதவி வகித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், மத்திய உள்துறை அமைச்சராகவும், நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சராகவும், தகவல் தொலைத் தொடர்பு அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

அத்வானியின் பிறந்தநாள் இன்று (நவம்பர் 8) கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் மூத்த தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான சித்தராமையா தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆபத்தில் உள்ள ஜனநாயகத்தைக் காப்பாற்ற உங்களின் வழிகாட்டல் தேவைப்படுகிறது” என்று பதிவிட்டுள்ளார். அத்வானியின் அனுபவத்தை பாஜக மதிக்கவில்லை என்றும் தனது ட்விட்டில் அவர் குறிப்பிட்டுள்ளார். குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மத்திய அமைச்சர்கள் சுரேஷ் பிரபு, அருண் ஜேட்லி உள்ளிட்டோரும் அத்வானிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மோடி வாழ்த்து

மூத்த தலைவரான அத்வானிக்கு பிரதமர் மோடி மரியாதை அளிப்பதில்லை என்று அண்மைக் காலமாக சர்ச்சைகள் எழுந்துள்ளன. திரிபுராவில் 2018ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி பாஜக தலைமையிலான அரசு முதன்முறையாகப் பதவியேற்றது. இந்த விழாவில் பிற தலைவர்களுக்கு வணக்கம் தெரிவித்த மோடி, அத்வானியை கண்டுகொள்ளாமல் சென்றார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அத்வானியை மோடி அவமதித்து விட்டார் என்று விமர்சித்தார்.

இந்நிலையில், அத்வானியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி தனது ட்விட்டரில், “எல்.கே.அத்வானி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவின் வளர்ச்சிக்காக அத்வானி அவர்களின் பங்களிப்பு மகத்தானது. மக்களுடன் நட்பு பாராட்டுவது மற்றும் எதிர்காலத்திற்கான சரியான முடிவை எடுப்பது போன்ற கொள்கைகளை பின்பற்றியதால் அவர் மத்திய அமைச்சர் பதவி வகித்த காலத்தில் பாராட்டுகளைப் பெற்றார்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்ததோடு அல்லாமல் அத்வானியை நேரில் சந்தித்தும் தனது வாழ்த்துக்களை மோடி தெரிவித்தார்.

வியாழன், 8 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon