மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 1 ஜுன் 2020

வேலைவாய்ப்பின்மை உயர்வு!

வேலைவாய்ப்பின்மை உயர்வு!

வேலைவாய்ப்பின்மை விகிதம் அக்டோபரில் 6.9 விழுக்காடு அதிகரித்துள்ளதாக செண்டர் ஃபார் மானிட்டரிங் இந்தியன் எகனாமி ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்த ஆய்வில் மேலும் கூறுகையில், ‘கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அக்டோபரில் வேலைவாய்ப்பின்மை மிகவும் அதிகரித்துள்ளது. தொழிலாளர் பங்களிப்பு விகிதம் 42.4 விழுக்காடாகக் குறைந்துள்ளது. இது 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குப் பிறகு காணப்பட்டுள்ள மிகப்பெரிய சரிவாகும். தொழிலாளர் பங்களிப்பு விகிதம் பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகுதான் பெரும் சரிவு கண்டுள்ளது. அதற்கு முன்பு தொழிலாளர் பங்களிப்பு விகிதம் 47 முதல் 48 விழுக்காடாக இருந்தது.

வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை ஒரே ஆண்டில் பெருமளவு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில் வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை 14 மில்லியனாக மட்டுமே இருந்தது. அக்டோபரில் இது 21.6 மில்லியனாக அதிகரித்தது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து இந்த ஆண்டு அக்டோபரில் 29.5 மில்லியனாக உயர்ந்துள்ளது. அக்டோபர் மாதக் கணக்குப்படி நாடு முழுவதும் 39.7 கோடி பேர் வேலைவாய்ப்பு பெற்றவர்களாக உள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு அக்டோபரில் 40.7 கோடியாக இருந்தது’ என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து சி.ஐ.இ.எல். ஹெச்.ஆர். சர்வீஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதித்ய நாராயணன் மிஷ்ரா தி எகனாமிக் டைம்ஸ் ஊடகத்திடம் பேசுகையில், “வழக்கமாக அக்டோபர்-டிசம்பர் காலத்தில் இந்திய பொருளாதாரத்தில் வேலைவாய்ப்புகள் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு தொழிலாளர்களுக்கான தேவை குறைவாக இருப்பது கவலையானது. ஆண்டுக்கு 12 மில்லியன் பேருக்கு புதிதாக வேலை தேவைப்படுகிறது. ஆனால் அந்த அளவுக்கு போதுமான அளவில் வேலைவாய்ப்புகள் இங்கு உருவாக்கப்படுவதில்லை” என்றார்.

வியாழன், 8 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon