மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 21 செப் 2020

அமைச்சருக்கு எதிராக வழக்கு!

அமைச்சருக்கு எதிராக  வழக்கு!

அமைச்சர் கே.சி.வீரமணிக்கு எதிரான புகார் மீது விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனுவின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம், இரு வாரங்களுக்குத் தள்ளிவைத்துள்ளது.

வேலூரில் சுந்தர்ராஜன் என்பவருக்கு சொந்தமான 6 ஏக்கர் 90 சென்ட் நிலத்தை குத்தகைக்கு பெற்றிருந்த ராமமூர்த்தி, ஜெயபிரகாஷ் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 2010 ஆம் ஆண்டு இந்த நிலத்தை சேகர் ரெட்டி உள்ளிட்டோர் வாங்கியுள்ளதாகவும், பின் அந்த நிலத்தை 225 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்து, தங்களுக்கு 65 கோடி ரூபாய் வழங்க ஒப்புக் கொண்டதாகவும், ஆனால் ஒப்பந்தப்படி, அத்தொகையை வழங்காமல், தமிழக வணிகவரித் துறை அமைச்சர் வீரமணியின் உதவியுடன், சட்டவிரோதமாக தங்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

“இந்த விற்பனை முடிந்தால், 100 கோடி ரூபாய் கிடைக்கும் என்பதால் அமைச்சர் வீரமணி, சட்ட விரோதமாக, அரசியல் பலத்தை பயன்படுத்தி, அந்த நிலத்தில் இருந்து தங்களை வெளியேறும்படி மிரட்டி வருவதாகவும், போலி ஆவணங்களில் தங்களிடம் கையெழுத்து பெற்றுள்ளதாகவும்” மனுவில் கூறியுள்ளனர்.

மேலும் இது சம்பந்தமாக டி.ஜி.பி.யிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சட்டப் பேரவை செயலாளருக்கும், அரசு கொறடாவுக்கும் இது தொடர்பாகப் புகார் அளித்ததாகவும், அந்தப் புகாரை முதல்வருக்கு அனுப்பி, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அமைச்சர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” எனவும் மனுவில் வலியுறுத்தியிருந்தனர்.

இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி மகாதேவன் முன்பு இன்று (நவம்பர் 8) விசாரணைக்கு வந்தது. அப்போது விளக்கம் அளிக்க அரசுத் தரப்பில் கால அவகாசம் கோரியதை அடுத்து, விசாரணை 2 வாரங்களுக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

வியாழன், 8 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon