மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 21 அக் 2020

பன்றிக் காய்ச்சல்: 17 பேர் உயிரிழப்பு!

பன்றிக் காய்ச்சல்: 17 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு 17 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்.

வேலூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையத்தில் தமிழகச் சுகாதாரத் துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பன்றிக் காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (நவம்பர் 8) காலையில் நடைபெற்றது. இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் தமிழகச் சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன். அப்போது, தமிழகம் முழுவதும் 1,700 பேர் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

“பன்றிக் காய்ச்சலுக்கு மட்டும் 17 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்தாண்டு பன்றிக் காய்ச்சலால் 3,800 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு 1,700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரத்தில் உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகளின் எண்ணிக்கை மருத்துவமனைகளில் அதிகமாக இருந்தது. ஆனால் மருத்துவக் குழுவின் கண்காணிப்பு தொடர்ந்த காரணத்தால், கடந்த 5 நாட்களில் 35 சதவிகித நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது” என்று கூறினார்.

தமிழகத்தில் காய்ச்சலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். “நோய் அறிகுறி தெரிந்தால் பொதுமக்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். அது மட்டுமில்லாமல், நோய்களுக்கு ஸ்டீராய்டு மருந்துகளைத் தரும் மருத்துவர்கள் மீது இந்திய மருத்துவ கவுன்சில் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

திண்டுக்கல் எமக்கலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு படிக்கும் யுவராஜ் என்ற சிறுவனும், திருப்பூரைச் சேர்ந்த ஸ்ரீராம் என்ற ஒரு வயதுக் குழந்தையும் மர்மக் காய்ச்சலால் நேற்று (நவம்பர் 7) உயிரிழந்தனர். கோவையில் பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பாதிப்பினால் ஆசிரியர் ஒருவர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். கோவை அரசு மருத்துவமனையில், தற்போது 84 பேர் காய்ச்சலுக்குச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வியாழன், 8 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon