மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 25 செப் 2020

பணமதிப்பழிப்பு: காயங்கள் இன்னும் ஆறவில்லை!

பணமதிப்பழிப்பு: காயங்கள் இன்னும் ஆறவில்லை!

பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிவுற்ற நிலையில், “பணமதிப்பழிப்பினால் ஏற்பட்ட காயங்கள் இன்னும் ஆறவில்லை” என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி புழக்கத்தில் உள்ள 500, 1000 ரூபாய் தாள்களை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மதிப்பழிப்பு செய்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். கறுப்புப் பண ஒழிப்பு, கள்ள நோட்டுத் தடுப்பு என்று காரணம் கூறப்பட்ட இந்த நடவடிக்கையால், பலதரப்பட்ட மக்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகினர்.

பணமதிப்பழிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்றுடன் (நவம்பர் 8) இரண்டாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நாடு முழுவதும் நாளை காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் மூன்றாம் ஆண்டு தினத்தை முன்னிட்டு இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நரேந்திர மோடி அரசு எடுத்த தவறான முடிவின் காரணமாக மோசமான அழிவுகளை ஏற்படுத்திய பணமதிப்பழிப்பு கொண்டுவரப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிவுற்றுள்ளன. இந்திய பொருளாதாரத்திலும் சமூகப் பரப்பிலும் பணமதிப்பழிப்பு ஏவிவிட்ட அழிவுக்கு தற்போது அனைவரும் சாட்சியாக உள்ளனர்.

காலம்தான் பெரிய மருந்து என்று கூறுவார்கள். ஆனால் பணமதிப்பழிப்பால் ஏற்பட்ட காயங்களும் வடுக்களும் இன்னும் ஆறவில்லை. மாறாக, அவற்றின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. பணமதிப்பழிப்புக்குப் பிறகு ஜிடிபி கடும் சரிவை சந்தித்தது. இதன் ஆழமான விளைவுகள் இன்னும் நீடித்துக்கொண்டிருக்கின்றன. பணமதிப்பழிப்பின் காரணமாக இந்தியப் பொருளாதாரத்தின் ஆதாரமான அம்சங்களான சிறு, குறு தொழில்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து அவை இன்னும் மீளவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

பணமதிப்பழிப்பு வேலைவாய்ப்பை நேரடியாக பாதித்ததாகக் குறிப்பிட்டுள்ள மன்மோகன் சிங், “இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதிலும் இந்தியப் பொருளாதாரம் கடும் சவால்களை சந்தித்துவருகிறது. நிதிச் சந்தைகளில் பணப்புழக்கம் குறைந்து நெருக்கடிகளை சந்தித்ததால் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் உட்கட்டமைப்பில் பாதிப்பு ஏற்பட்டது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பணமதிப்பழிப்பின் முழு பாதிப்புகளை இன்னும் புரிந்துகொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ள அவர், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

“இந்தியப் பொருளாதாரத்தின் நிச்சயமற்ற மற்றும் தெளிவற்ற நிலையை மீட்டெடுக்க வேண்டும். பொருளாதார ரீதியான அபாயகரமான சாகசங்கள் நாட்டை நீண்ட காலத்திற்கு முடக்கும் என்பதையும், இனி பொருளாதார கொள்கை முடிவுகளை கவனத்தோடும் தெளிவாகவும் எடுக்க வேண்டும் என்பதையும் இந்த நாள் நமக்கு நினைவூட்டுகிறது” என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

வியாழன், 8 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon