மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 24 ஜன 2021

மெரினா புரட்சிக்குத் தடை: பின்னணியில் பீட்டா?

மெரினா புரட்சிக்குத் தடை: பின்னணியில் பீட்டா?வெற்றிநடை போடும் தமிழகம்

ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் பற்றி பேசும் மெரினா புரட்சி திரைப்படத்துக்கு நடிகை கௌதமி தலைமையிலான மறுசீராய்வுக் குழு அனுமதி மறுத்திருக்கிறது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தை மையமாகக் கொண்டு எம்.எஸ். ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது மெரினா புரட்சி படம். மெரினா புரட்சி படத்தைச் சென்னை மண்டல தணிக்கைக் குழுவுக்கு படக்குழுவினர் கடந்த மாதம் திரையிட்டு காட்டினர். படத்தைப் பார்த்த அதிகாரிகள் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் தர மறுத்தனர். காரணம் எதுவும் கூறாமல் படத்தை மறு சீராய்வு குழுவுக்கு அனுப்பினர். இதுகுறித்து ஏற்கெனவே மின்னம்பலத்தில் பதிவு செய்திருந்தோம்.

தற்போது நடிகை கௌதமி தலைமையிலான இந்த மறுசீராய்வுக்குழுவும் மெரினா புரட்சி படத்துக்கு அனுமதி மறுத்திருக்கிறது. ஜல்லிக்கட்டு நிகழ்வைக் கடுமையாக எதிர்க்கும் பீட்டா அமைப்புதான் இந்த முட்டுக்கட்டைக்கு காரணமாக இருக்கலாம் என திரைத்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இது குறித்து படக்குழுவினரிடம் விசாரித்த போது, “இந்திய சினிமாட்டோகிராப் சட்டம் 1983 விதியின்படி மறுசீராய்வுக் குழு மறுப்பு தெரிவித்தால் FCAT எனப்படும் டெல்லி டிரிப்யூனல் சென்று தணிக்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்பது வழக்கமான நடைமுறை. ஆனால் மெரினா புரட்சி படத்திற்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டு இரண்டாவது மறுசீராய்வுக்குழுவுக்கு படம் அனுப்பப்பட்டிருக்கிறது.

காரணமின்றி நிராகரிப்பதும் காலதாமதம் செய்வதும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. குறிப்பிட்ட விலங்குகள் நல அமைப்பின் கடிதம் தான் இந்த தடைக்கு காரணமாக இருக்குமோ எனும் ஐயம் எழுகிறது.

தமிழர்களின் பெருமை மிகு அடையாளமான ஜல்லிக்கட்டு போராட்டத்தை உரத்த குரலில் சொல்லும் மெரினா புரட்சி படத்தை முடக்கும் அனைத்துச் சதிகளையும் முறியடிக்க நாச்சியாள் பிலிம்ஸ் குழுவினர் உறுதியுடன் இருக்கிறோம்” என்று கூறினர்.

வியாழன், 8 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon