தெலங்கானா தேர்தலை ஒட்டி ஹைதராபாத்தில் நேற்று (நவம்பர் 7) நடத்தப்பட்ட சோதனையில் ரூ.7.51 கோடிyai பறக்கும் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
தெலங்கானா மாநிலத்தில் டிசம்பர் 7ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. காங்கிரஸ், பாஜக, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, தெலுங்கு தேசம் உள்பட பல கட்சிகள் தேர்தல் பிரசாரங்களில் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றனர். ஓட்டுகளைக் கவரவும், கூட்டத்திற்கு ஆட்களைச் சேர்க்கவும் பணம், மது எனச் செலவழிக்கப்பட்டு வருகிறது. தேர்தலில் முறைகேடான பணப் பட்டுவாடாவை தடுக்கும் வண்ணம் பறக்கும் படையினர் அம்மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த அக்டோபர் 29ஆம் தேதி அன்று இருசக்கர வாகனத்தில் வந்த இருவரிடம் நடத்திய சோதனையில் ரூ 1.20 கோடி கைப்பற்றப்பட்டது. இதன்படி தொடர் சோதனையின் போது நேற்று (நவம்பர் 7) கணக்கில் வராத ரூ 7.51 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் இதில் தொடர்புடைய நான்கு ஹவாலா இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து ஹைதராபாத் காவல் ஆணையர் அஞ்சனி குமார் கூறுகையில், "வருமான வரித் துறைக்கும், அமலாக்கத் துறை இயக்குநருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பண பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ள போலி நிறுவனங்கள் பற்றி விசாரிக்கப்படும். வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக இந்த பணம் கொண்டு வரப்பட்டிருக்கலாம். இதில் சில தலைவர்களுக்கும் தொடர்பு இருக்கிறது. தனி நபரானாலும், அரசியல் கட்சியானாலும் பணத்தின் மூலம் தேர்தலில் அதிகாரம் செலுத்த நினைப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்" எனத் தெரிவித்தார்.
மேலும் கைது செய்யப்பட்ட நால்வரில் பாபுட் சிங் வீட்டினை சோதனை செய்யும் போது கை துப்பாக்கி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தெலங்கானா தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் நடந்து வரும் சோதனையில் நவம்பர் 5 ஆம் தேதி வரையிலும் சுமார் ரூ 56.48 கோடி கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.