மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 24 செப் 2020

டெல்லி: தீபாவளியினால் மீண்டும் காற்று மாசுபாடு!

டெல்லி: தீபாவளியினால் மீண்டும் காற்று மாசுபாடு!

இன்று மதியம் 12 மணியளவில், டெல்லியில் காற்று மாசு அளவு மிக மோசமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விவசாயக் கழிவுகளாக மீதமாகும் கூளங்களை எரிப்பதாலும், வாகனங்களில் இருந்து வெளியாகும் நச்சுப்புகையினாலும், நாட்டின் தலைநகரம் டெல்லியில் காற்று மாசு அளவு உயர்ந்துகொண்டே வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே, நவம்பர் – ஜனவரி மாதங்களில் இது பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. இதனைத் தவிர்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும், காற்றில் மாசு அளவைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

காற்றின் திசை மாறியதாலும், கூளங்களை எரிக்கும் வழக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாலும், கடந்த ஒரு வார காலமாக டெல்லியில் காற்று மாசு அளவு குறைந்தது. இந்த நிலையில், நேற்று (நவம்பர் 7) அங்கு தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. மக்கள் பட்டாசுகளை வெடித்ததால், மீண்டும் டெல்லியில் காற்று மாசு அளவு அதிகரித்தது.

டெல்லியில் இன்று காலையில் புகைமூட்டம் அதிகமாக இருந்தது. வாகனங்களை இயக்க முடியாத அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது. இதனால், சாலைகளில் முகமூடிகளை அணிந்துகொண்டு சென்றனர் மக்கள். விளக்குகளை எரியவிட்டபடி, வாகனங்கள் இயக்கப்பட்டன.

டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு மைதானம் இருக்கும் பகுதியில் காற்று தர குறியீடு 379 ஆக இருந்தது. சிரி கோட்டை பகுதியில் 334 ஆகவும், டிஐடிஇ ஓக்லா பகுதியில் 722 ஆகவும், அமெரிக்கத் தூதரகம் இருக்கும் பகுதியில் 270 ஆகவும், மேஜர் தயான்சந்த் மைதானப் பகுதியில் 315 ஆகவும், சிஆர்ஆர்ஐ மதுரா சாலையில் 233 ஆகவும் காற்று தர குறியீடு இருந்தது. இது, இன்று மதியம் 12 மணிக்குப் பதிவான தகவல்களாகும்.

வியாழன், 8 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon