மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 26 மே 2020

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு இல்லை!

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு இல்லை!

இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா திட்டமிட்டிருப்பதாக வெளியான தகவலில் எந்த உண்மையும் இல்லை என அந்நாட்டு அரசு விளக்கம் அளித்திருக்கிறது.

இலங்கையின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள மகிந்த ராஜ்பக்சே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார். ஆனால் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே தமக்கே பெரும்பான்மை இருக்கிறது எனக் கூறிவருகிறார்.

மேலும் இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ரணிலுக்கு வாய்ப்பு தரப்பட வேண்டும் என என சபாநாயகர் கரு ஜெயசூர்யா வலியுறுத்திவருகிறார். இந்த நிலையில் ராஜபக்சேவுக்குப் பெரும்பான்மை கிடைக்காது என்பதால் புதன்கிழமை நள்ளிரவில் (நவம்பர் 7) நாடாளுமன்றத்தை சிறிசேனா கலைக்கத் திட்டமிட்டிருக்கிறார் என்கிற தகவல் நேற்று மாலை தீயாகப் பரவியது.

இதனால் தலைநகர் கொழும்புவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் திட்டம் எதுவுமே இல்லை; அதற்கான அவசியம் எதுவும் இல்லை என ராஜபக்சே விளக்கம் அளித்திருந்தார். அத்துடன் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு அரசியல் சாசனத்தின்படி ஜனாதிபதிக்கு அதிகாரம் இருக்கிறது என்பதையும் ராஜபக்சே சுட்டிக்காட்டினார்.

ராஜபக்சேவின் இக்கருத்து மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து இலங்கை அரசு ஊடகங்களுக்கு அனுப்பிய அறிக்கையில், நாடாளுமன்றத்தைக் கலைக்க தயாராவதாக உண்மைக்கு புறம்பான பிரச்சாரத்தை தற்பொழுது சில திட்டமிட்ட குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். உண்மைக்குப் புறம்பான மற்றும் அடிப்படையற்ற இந்த பிரச்சாரத்தை முற்றிலும் நிராகரிப்பதாக அரசாங்கம் இதன் மூலம் அறிவுறுத்துகின்றது எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனால் இலங்கையில் திடீரென ஏற்பட்ட அரசியல் குழப்பம் சற்று ஓய்ந்திருக்கிறது.

வியாழன், 8 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon